
சாய்மனைக்கதிரையில் சாய்ந்திருந்தவருக்கு தலை விண் விண்ணென்று வலித்தது. கண்ணை மூடிக் கிடந்தாலும் காதுகள் பேரிரைச்சலை உள்வாங்கிக் கொண்டிருந்தன. வீடு இருளில் மூழ்கிய தருணம் பூரணி மெழுகுதிரிகளை கொழுத்தி வந்து அங்கங்கே வைத்தாள். அந்த மெல்லிய வெளிச்சத்தில் கண்களைத் திறந்து அவளைப் பார்த்தார்.
மெலிந்த உருவம். முன் நெற்றியில் வெள்ளிக் கம்பிகளாய் நரைமயிர், இழுத்து பின் கழுத்துப்பக்கம் அவசரமாய் ஒரு முடிச்சு. கனிவு நிரம்பிய முகம்.
அருகே வந்து அவர் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.
“ ஏன்… தலை வலிக்குதா…”
“ இல்லை. யோசனையாக் கிடக்கு. இந்த புயலும் மழையும் எப்ப குறையப் போகுதோ தெரியேலை.”
“ வீட்டுக்குள்ள பாதுகாப்பாய்த்தானே இருக்கிறம். கரண்ட் நின்றதும் ஒருவிதத்தில நல்லது. செய்தியளைப் பார்த்து கலங்கிக் கொண்டிருக்கிற தேவை இல்லை”
“ ஆனா செய்தி பார்த்தால்தானே நிலமை தெரியும்.”
“ நிலமை தெரிஞ்சு என்ன செய்யப்போறோம். எங்கட இடங்களுக்கு வெள்ளம் வராது. பயப்படத் தேவையில்லை. சரி ஏழு மணியாகுது. எழும்புங்கோ சாப்பிடலாம்.”