
மாறனின் மனம் சமாதானமாகவில்லை. ஏதோ தவறிழைத்தவன் போல அமைதியற்று இருந்தான். இந்த புயலும் மழையும் தொடர்ந்தால் என்ன செய்வது…வற்புறுத்தியென்றாலும் அழைத்து வந்திருக்கலாமோ என்று தோன்றியது. எழுந்து வந்து சன்னல் வழி வெளியே பார்த்தான். புயலின் இரைச்சல் கொஞ்சம் தணிந்து விட்டது போலத்தான் தோன்றியது. ஆனால் மழை மட்டும் அதே வேகத்தோடு நிலம் நோக்கி ஆக்ரோஷத்தோடு விழுந்து கொண்டிருந்தது. வானமே தெரியவில்லை. இருளைக் கிழித்துக்கொண்டு இறங்கும் வெள்ளிக் கோடுகள்தான் தென்பட்டன. அறைக்குள் ஒரு மெழுகுதிரி ஒளிர்ந்து கொண்டிருந்தது. குழந்தைகள் இருவரும் உறங்கி விட்டார்கள். மைதிலி அவனிடம் வந்தாள்.
“ வாங்கோ சாப்பிடலாம்.”
“ பசிக்கேலை மைதிலி. நீ போய்ச் சாப்பிடு”
“ கொஞ்சமாய் என்றாலும் வந்து சாப்பிடுங்கோ”
அவனுக்குத் தெரியும். சாப்பிடப் போகாமல் விட்டால் அவளும் சாப்பிடமாட்டாள்.
“ சரி வா “
மைதிலி கையில் ஒரு மெழுகுதிரியை எடுத்துக்கொண்டு படி இறங்க அவன் தொடர்ந்தான்.
அடுப்பில் பாத்திரம் வைத்து இருந்த புட்டையும் கறியையும் சூடு காட்டிஎடுத்து வந்து தட்டுகளில் வைத்தாள்.