
அறை மூலையில் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியின் மெலிந்த வெளிச்சத்தில் அவர் கீழே பார்த்தார்.
“ என்ன சத்தம்..”. பூரணி பதற்றத்துடன் ஓடி வந்தாள்.
“ இல்லை.. கால் தடக்கி கதிரை* (chair) விழுந்திட்டுது. அதுதான்..”
அவர் குனிந்து கீழே விழுந்து கிடந்த கதிரையை எடுத்து நிமிர்த்தி வைத்தார்.
“ சத்தம் கேக்க நான் பயந்திட்டன். கவனமப்பா”
“ சார்ஜரைத் தேடிப் பார்க்கிறன் ..பொறு.”
அவர் மேஜை மீது பார்த்து விட்டு இழுப்பறைகளையும் திறந்து தடவினார்.
“ காணேலை. எங்க வைச்சன் என்றும் நினைவில இல்லை. “
“ சரி. விடுங்கோ. இங்கால வாங்கோ. நாளைக்குப் பகல் வெளிச்சத்தில தேடி எடுக்கலாம். “
அவர் கையைப் பிடித்து வெளியே கூட்டி வந்தாள்.
“ தம்பி எப்பிடியும் போன் பண்ணியிருப்பான். நான் எடுக்கேலை எண்டதும் சரியாய் கவலைப்படப் போறான். இரவு முழுக்க பிள்ளை யோசிச்சுக் கொண்டிருக்கப் போகுது. மத்தியானமே கவனிச்சு சார்ஜ் போட்டு வைச்சிருக்க வேணும். சே.. விட்டிட்டன். என்ன மறதியோ…”
புலம்பும் அவரைக் கவலையுடன் பார்த்தாள்.