
சட்டென்று விழிப்பு வந்தது மாறனுக்கு. கைக்கடிகாரம் ஐந்தரை என்று நேரம் காட்டியது. பதறியபடி எழுந்தான். பல் துலக்கி முகம் கழுவி வந்து உடுப்புகளை மாற்றினான். யன்னல் வழியே வெளியே இருள்தான் மூடிக் கிடந்தது. பொழுது இன்னமும் விடியவில்லை. காற்றின் சத்தம் வெகுவாக குறைந்திருந்தது. மழையும் உக்கிரம் குறைந்து மென் தூறல்களாக சிந்திக் கொண்டிருந்தது. அவன் கீழே இறங்கி தண்ணீர் வைத்து கோப்பி போட்டு குடித்தான். முதலில் கோப்பி எதுவும் வேண்டாம் என்றுதான் நினைத்தான். பிறகு மனதை மாற்றிக் கொண்டான். குளிருக்கு கோப்பி குடித்தால்தான் இயங்க முடியும். கோப்பையைக் கழுவி வைத்த போது மைதிலி இறங்கி வந்தாள்.
மாறன் கார் சாவியை எடுத்துக் கொண்டான்.
“ நல்லவேளை நினைச்சு பயந்த அளவில புயல் இருக்கேலை. புயல் கடந்து போயிட்டுது போல. மழையும் குறைஞ்சிட்டுது. கவனமாய் போயிட்டு வாங்கோ. எப்பிடியும் கூட்டி வரப் பாருங்கோ. நாலைஞ்சு நாள் இங்க இருந்திட்டு பிறகு வேணுமென்றால் போகட்டும்.”
“ அப்பிடித்தான் நானும் நினைக்கிறன்.”