மினி தொடர்கதை: பாசமலர் 2.0 - பகுதி 1
இனியா அந்த காவல்நிலையம் நோக்கி தன் டூ வீலரை செலுத்தினான்.
கடந்த மூன்று நாட்களாக அதுவே அவன் காலை வேலையாகிப் போயிருந்தது.
சிற்றுண்டி அருந்தியவுடன் நேராக அந்த காவல்நிலையம் நோக்கி தான் அவன் டூ வீலர் ஓடிக்கொண்டிருக்கிறது.
அவன் மனம் கேட்கவில்லை.
பெரிய அதிகாரியைப் பார்த்துவிடும் நோக்கிலே அவன் இருந்தான்.
காவல்நிலையம் அவன் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தான் இருக்கும். தங்கை இருந்தால் அறிவுறை சொல்லியிருப்பாள், ”நடந்து போ அண்ணே. ரெண்டு கிலோமீட்டர் தானே. தொந்தி விழுது பார். அப்புறம் அண்ணி கிடைக்கிறது கஷ்டம்...” இப்போ தான் தங்கை இல்லையே. தங்கையை எண்ணி அவன் மனம் உள்ளுக்குள் அழுதது.
காவல் நிலையம் அடைந்த இனியா வண்டியை வெளியில் நிறுத்தி உள்ளே நுழைந்தவுடன் அவனைத் துப்பாக்கி ஏந்திய அந்தக் காவலர் தடுத்து நிறுத்தினார்.
“ஏம்ப்பா, நீ சொன்னா கேட்க மாட்டியா? அதான் முடிந்து போன கேசாயிடுச்சே!”