
இனியாவிற்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை. அவனும் அவன் தாய் மரகதமும் தான். இனியாவின் தங்கை ரோஜாவுக்கு கல்யாணம் ஆகிவிட்டது. மாப்பிள்ளை சிங்கப்பூரில் வேலை பார்த்துவந்தான். ஆறு மாதத்துக்கு ஒருமுறை பதினைந்து நாள் விடுப்பில் வந்து செல்வான் மாப்பிள்ளை.
தங்கை ரோஜா கல்யாணம் ஆனவுடன் புருஷன் வீட்டிற்கு மாமியாருடன் வசிக்கச் சென்றுவிட்டாள்.
வயதான மாமியாரும் அவளும் தனியே தான் இருந்து வந்தார்கள்.
மாப்பிள்ளை சிங்கப்பூரில் இருந்ததால், அவள் இனியாவிடம் சொல்லி, இனியா தான் ரோஜாவுக்கு அந்தக் கடை ஏற்பாடு செய்துகொடுத்திருந்தான்.
ஃபான்சி பொருட்களும் சில ப்ளாஸ்டிக் பொருட்களும் சிறிய அளவில் வைத்து வியாபாரம் செய்து வந்தாள் ரோஜா. கூடுதலாக ஒரு செராக்ஸ் மெசினும் இருந்தது.
தாய்க்கோழி பக்கம் இல்லாதபோது குஞ்சுகளை கவர்ந்துசெல்ல வரும் கழுகைப் போல புருஷன் பக்கத்தில் இல்லாததால் ரோஜாவுக்கு செக்ஸ் தொல்லை கொடுக்க ஆரம்பித்தான் பக்கத்து வீட்டு கோபால்.
ரோஜா அவள் பெயருக்கு ஏற்றாற் போல் அழகானவள். அவள் தினமும் அண்ணன் இனியா அமைத்துக்கொடுத்திருந்த கடைக்கு தனித்து சென்று வருவது கண்ட கோபாலின் தொல்லை மேலும் அதிகமானது.
இத்தனைக்கும் கோபால் கல்யாணம் ஆனவன்.
முதலில் வாடிக்கையாளர் போல் கடைக்குப் போக ஆரம்பித்த கோபாலின் தொல்லை அதிகமாக அதிகமாக, தாங்கமுடியாத ரோஜா இனியாவுக்கு தகவல் கொடுத்தாள்.
“ரொம்ப தொந்தரவு செய்யறான் அண்ணே, ஊரு பூரா என்னைப் பத்தி தப்பு தப்பா பேசிக்கிட்டு இருக்கான், அந்த கோபாலு. ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் அவனைக் கொலை செய்யப் போறேன்ண்ணே. உனக்கு கல்யாணம் ஆகனும்னு தான் பொறுமையா இருக்கேன்.”