

இருபத்துமூன்று ஏப்ரலில் இனிதான திருவிழா
ஊரெங்கும் நடக்குது ஒய்யாரம் பெருகுது!
பதினெட்டு நிரம்பிய பக்குவம் நிறைந்திட்ட
அனைவரும் பங்கேற்கும் அற்புதத் திருவிழா!
இந்து இஸ்லாம் கிறித்தவர் என்றபாகுபாடின்றி
ஆண் பெண் மூன்றாம் பாலினத்தவரென்று
அத்தனை பேரும் கொண்டாடும் பொதுவானதிருவிழா!
ஏழுமணி காலையில் தொடங்கும் இந்தத்திருவிழா
நாள்முழுதும் தொடர்ந்திடும் நல்மாலை ஆறுவரை
வரிசையில் நின்றிட்டால் வாக்களிக்கும் நேரம்வரை
செயல்பட்டு ஓட்டளிக்கச் செவ்வனே வழிவகுத்திடும்!
வளர்ச்சிக் குறியீட்டில் வகையாய் நம்மாநிலம்
முதன்மைநிலை வகிப்பதுபோல் முத்தான வாக்களிப்பிலும்
முன்னதாய் வரவேண்டும் முழுசதவீதம் பெறவேண்டும்!
நலிவுற்ற முதியோர்கள் நடுத்தர வயதினர்
நண்பகல் விலக்கிட்டுக் காலைமாலை வேளையில்
கதிரவன் நேர்ஒளியினைக் கனிவுடனே தவிர்த்திட்டு
ஓட்டுப் போடச்செல்லலே உயர்வான நல்முறை!
போகுமுன்னால் கையிலே போதுமான சான்றுகள்
இருக்குமாறு பார்த்துக்கொண்டால் ஏதுமில்லை பிரச்னை!
போனோம் வந்தோம் போட்டோம் ஓட்டென்று
எளிமையாய் அனைத்துமே ஏகமாய் முடிந்திடும்!
ஜனநாயகக் கடமையைச் சரியாக ஆற்றிய
திருப்தியே மனமெங்கும் திகட்டாமல் படர்ந்திடும்!
நெற்றிக் குங்குமத்தில் குடும்பப்பெண்கள் மகிழ்வதாய்
ஆட்காட்டிவிரல் மையில் அடிமனது நெகிழ்ந்திடும்!
அம்மன்கோயில் திருவிழாவன்று அனைவரும் ஊரிலிருப்பதைப்போல்
இந்தத் திருவிழாவன்றும் இருந்திடுவோம் ஊரினிலே!
நல்ல பிரதிநிதிகளை நாம் தேர்ந்தெடுக்க
இந்தத் திருவிழா இதமாய் உதவிடும்!
ஒருவர் கூட ஒதுங்கி விடாமல்
ஓட்டளிப்பதை உறுதி செய்திடல் வேண்டும்!
பார்வையற்றோர் பலவித உடற் குறையுள்ளோர்
எல்லோரும் வாக்களிக்க இயன்ற அனைத்தையும்
இந்தியத் தேர்தலாணையம் எதனையும் விட்டுவிடாமல்
பார்த்துப் பார்த்துச்செய்துளது பலபேரும் பயன்பெறவே!
எல்லோரும் ஓட்டளித்தோம் எவரும் விடுபடாமலே
என்பதே பெரும்பெருமை! இதனையும் சாதிப்போம்!