கவிதை: மரபை மீட்டெடுக்குமா மருத்துவ உலகம்!

வாழ்நாள் முழுவதும் மருந்து, மாத்திரை சாப்பிடும் நிலையை மாற்ற மரபு மருத்துவத்தை மீட்டெடுப்பது எப்படி? மருத்துவ உலகின் எதிர்காலம் குறித்த விரிவான பார்வை.
மாத்திரை | Modern and Traditional Medicine
மாத்திரை | Modern and Traditional MedicineAI Image
ரெ. ஆத்மநாதன்

எழுத்தாளர் ரெ.ஆத்மநாதன் பொருளாதாரத்திலும், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியலிலும் முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். கதை, கவிதை, நாடகம் என்று முத்தமிழுக்கும் பணி செய்பவர். கதை, கவிதைகளை மாத,வார, ஆன்லைன் இதழ்களில் எழுதி வருபவர். இவரின் 4 நாடகங்கள் சென்னை, திருச்சி வானொலி நிலையங்களால் ஒலி பரப்பப் பட்டன. இளங்கலை முதலாண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத் தேர்வில் (1972-73) மாநில முதன்மை பெற்றவர்.பட்டி மன்றம், கவியரங்கம் ஆகியவற்றில் பங்கேற்பவர். அமெச்சூர் நாடகங்களில் நடித்தவர். தமிழக அரசின் மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித் துறையில் ஆராய்ச்சி முன்னவராகச் சேர்ந்து, அத்துறையின் பொறுப்பு இயக்குனராக ஓய்வு பெற்றவர். “தொடர்கதைகளும் முற்றும்” என்ற சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டவர்.

Updated on
Kalki Strip
Kalki Strip

மரபை மீட்டெடுக்குமா மருத்துவ உலகம்!

புற்றுநோய் வந்துவிட்டால் புத்துலகில் வாழ்வில்லை

உற்றார் உறவினரை ஒருசேரப் பிரிந்துவிட்டு

கற்ற அனைத்தையுமே கடிதினிலே மறந்துவிட்டு

சற்றும் ஆறுதலைச் சமாதானமின்றி இழந்துவிட்டு

நிர்க்கதியாய் குடும்பத்தை நீளுலகில் விட்டுவிட்டு

போய்ச்சேரும் காலமெல்லாம் போனதின்று வரலாறாய்!

ஆரம்ப நிலையிலேயே அதனைக் கண்டுகொண்டு

முறையான சிகிச்சையையுமே முழுமையாய் எடுத்திட்டால்

கேன்சரும் கழன்றோடும்!கேள்விக் குறியான

வாழ்க்கையும் மீண்டும் வளமாகித் திரும்பவரும்!

குடும்பத்தில் அமைதிவரும்!கூடவே மகிழ்ச்சிவரும்!

நிம்மதியாய் இறுதிக்காலம் நீண்டு திருப்திதரும்!

எங்கள் இளமையிலோ இருந்ததோ ஒருவைத்தியர்

வயிற்று வலிதொடங்கி வாதச்சீர் கேடுவரை

உடல்உபாதை எதுவென்றாலும் ஒருவரே மருந்தளிப்பார்

கண் காது மூக்கு தொண்டையென்று காலப்போக்கினிலே

திசுக்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மருத்துவரை

அணுகும் காலம் வந்தாலும் ஆச்சரியம் ஏதுமில்லை!

புண்எது வென்றாலும் பொதுவான களிம்புஒன்றை

வரிசையில் நின்றுபெற்ற வரலாற்றுக் காலமெல்லாம்

நினைவிலே ஊறுதின்று!நீளமாய் பேஸ்டைப்போல

பலப்பல க்ரீம்கள் ஆயின்மெண்ட் என்றே

பலவாறான மருந்துகளின்று பகலுக்கும் இரவுக்குமென்று

வளந்தர வந்ததின்று!வாழ்வினைச் செம்மையாக்க!

ஆனாலும் ஒன்றுமட்டும் அகத்தினில் கன்ப்யூஷனை

நித்தமும் தோற்றுவிக்கும் நிம்மதியைக் கூருபோடும்!

இதையும் படியுங்கள்:
கவிதை: முதுமையின் முகவரி
மாத்திரை | Modern and Traditional Medicine

விருந்தும் மருந்தும் மூன்றே நாளென்று

முழுதாய் அறிந்த நமது முன்னோர்கள்

சொல்லிவைத்த வார்த்தையுமின்று பொய்த்துப் போனதற்காய்

புழுங்குது மனசெல்லாம்!பொங்குது ஆற்றாமையில்!

உணவினைப் போலயின்று ஒவ்வொரு வேளைக்கும்

அதற்கும் மேலாய் மருந்து மாத்திரைகளை

அள்ளியே அயராது உள்ளே தள்ளும்

நிலைமைக்கு முடிவுயெப்போ?நிம்மதியாய் சாப்பாட்டை

ரசித்து ருசித்துச் சாப்பிட்டுச் சங்கடம்போக்கும்

நிலையை எய்துவதெப்போ?இயம்புங்கள் மருத்துவர்களே!

சர்க்கரை வியாதிக்குத் தலைநகராம் நம்நாடு

ரத்தஅழுத்தம் கொலஸ்டரால் நலம்போக்கும் வியாதிகளென

இத்தனையும் இன்றைக்கு எளிதாக நம்மிடையே

வலம்வந்து அனைவரையும் வாடி வதங்கவிட்டு

மருந்து சமுத்திரத்தில் வாழ்நாளை இழக்கவைக்கும்!

விஞ்ஞானம் முன்னேற்றம் விதவித மருந்துகள்

வேண்டிய கருவிகள் விதவிதப் பரிசோதனைகள்

அத்தனையும் இருந்தும் ஆயுள்பரியந்தம் மருந்துகளை

எடுத்துக்கொள்ளச் சொல்வதில் இருக்கிறதா பொதுநியாயம்?

மருந்தென்றால் நோயை முழுதாய் அகற்றவேண்டும்

இரண்டிலிருந்தும் விடுதலையை இனிதாய்த் தரவேண்டும்!

உலக மருத்துவர்களே!மருந்தாளும் நிபுணர்களே!

மூன்றுநாள் சிகிச்சைக்கு முழுதாய்த் திரும்புங்கள்!

மாத்திரை | Modern and Traditional Medicine
மாத்திரை | Modern and Traditional MedicineAI Image

நாட்பட்ட நோயென்றால் நாட்கள் பலவற்றில்

சிகிச்சை தொடரட்டும்!இனிப்பு வியாதிக்கு

இப்பிறவி முழுவதிலும் மருந்து சாப்பிடுவதை

மாற்றுங்கள்! விரைந்து குணமாக்க முயலுங்கள்!

இதையும் படியுங்கள்:
ஒரு கதை - ஒரு கவிதை - ஒரு கதைக்கவிதை!
மாத்திரை | Modern and Traditional Medicine

மரபைப் பின்பற்றி மனிதர்களை மனதில்வைத்து

சிகிச்சைக் காலத்தைச் சீக்கிரமாய்க் குறைத்திடுங்கள்!

ஆயுளுக்கும் மருந்தென்ற அவல நிலைமாற

நீங்கள் மனம் வைத்தால் நிச்சயம் கைகூடும்!

பிறவிக்கும் உங்களையே பெரும்பாலான மனிதர்கள்

தெய்வமெனப் போற்றிடுவர்! திருப்தியுடன் வாழ்ந்திடுவர்!

மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com