

‘என்னங்க!’ என்றே
ஏகபத்தினி அழைத்திட்டால்
ஆயிரம் அர்த்தங்கள்
அதனுள்ளே அடக்கமென்று
ஒத்த கருத்துள்ள
உயர்வான தம்பதியர்
நன்றாய் அறிந்திடுவர்
நலமுடனே கடைப்பிடிப்பர்!
சமையலறை சம்சாரம்
‘என்னங்க!’ என்றிட்டால்
‘வாசலைப் பாருங்கள்
வந்திருப்பது யாரென்று!’
என்ற பொருளை
இணையும் நன்குணர்வார்!
முக்கிய முடிவெடுக்க
முறையாகப் பேசுகையில்
‘என்னங்க!’ என்றேயவரும்
எளிதாக அழைத்திட்டால்…
‘உள்ளே வந்திடுங்கள்!
உங்களிடம் சிலவற்றை
தனியாகப் பேசியபின்
தக்க முடிவெட்டலாம்!’
என்பதே பொருளாம்
இருவருக்கும் அத்துபடியாம்!
வண்ண மலர்க்கடையை
வாகனம் கடக்கையிலே
‘என்னங்க!’ என்ற குரல்
‘நிறுத்திடுங்க! பூவாங்க!’
என்ற வேண்டுகோளாம்!
இதனையே அறியாமல்
இருக்கும் கணவர்களை
என்னவென்று நாம் சொல்ல?!
பாத்ரூம் உள்ளிருந்து
பதற்றமாய் ‘என்னங்க!’
என்றே குரல் வந்தால்
பல்லியோ கரப்பானோ
பயமுறுத்தும் வேறெதுவோ
உள்ளிருப்பதாய் அர்த்தம்!
உடனடியாய் ஓடவேண்டும்!
வேறு பெண்களுடன்
விஷயமின்றிக் கதைக்கையிலே
‘என்னங்க!’ என்பதொலித்தால்
உடனடியாய் நிறுத்திவிட்டு
உள்ளே ஓடிடணும்!
அனுபவக் கணவர்கள்
அனைவருமே அறிந்ததிது!
குடும்ப விஷயங்களைக்
கூடியிருந்து பேசுகையில்
‘என்னங்க’ என்பதைக் காதுகேட்டால்
எழும்பியே இடத்தை
இனிதாய்க் காலி செய்திடணும்!
மேலும் பேச வேண்டியதை
அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்
என்ற எச்சரிக்கையது!
என்னங்க நீங்க?
என் கவிதை நிறுத்திவிட்டு
உள்ளே ஓடுவது
உசிதமாய்த் தெரியலையே!
“ஓ! என்னங்க! என்றே
என் மனைவி அழைத்த பின்னால்
கடவுளே என்னெதிரே
கனிவுடனே நின்றாலும்
மனைவியைப் பார்த்த பின்தான்
மற்றது எல்லாமும்!”
என்ற உங்கள் வாதம்
ஏற்றிடக் கூடியதே!
உண்மையே உங்கள் கூற்று!
“மனைவியே கடவுள்
கடவுளே மனைவி!”
என்றே வாழ்ந்திட்டால்
ஏகமாய் மகிழ்ச்சி பொங்கும்!
பிறவி நிறைந்துவிடும்!
பேரமைதி மனதில் வரும்!