

மார்கழி கவிதை (Margazhi Poetry):
மார்கழி மாதம் வந்து விட்டது
மனமெங்கும் மகிழ்ச்சி தங்கி விட்டது!
பனியும் குளிரும் இணைந்தே நம்மைப்
பக்குவப் பருவத்திற்கு இழுத்தே செல்லும்!
பிரம்ம முகூர்த்தம் தொடங்கும் நேரம்
பிள்ளையார் கோயில் சிவனார் ஆலயம்
ஒன்றும் விடாமல் ஒலித்திடும் கீதம்!
திருப்பாவையும் திருவெம்பாவையும்
போர்வையைத் தாண்டி புள காங்கிதமாய்
காதை நிறைத்திடும் கனவைப் பெருக்கிடும்!
பஜனைப் பாடல்கள் பலரின் வாயில்
நிறைந்து வந்திடும் நிம்மதி தந்திடும்!
ஆவி பறக்கும் அரிசிப் பொங்கலை
விழுங்கிய படியே வீட்டுக்கு நடப்பர்!
இருபுறம் வீடுகள் இருக்கும் சாலையில்
நடக்கவும் கூட இடம் இல்லாமலே
கோலங்கள் போட்டுக் குதூகலிப்பர் மகளிர்!
வண்ணக் கோலங்களின் வயிற்றுப் பகுதியில்
பறங்கிப் பூக்களை பரப்பியே வைத்து
நடப்போர் கவனத்தை ஈர்ப்பார் பெண்டிர்!
காலைப் பொழுதின் காட்சி இதுவென்றால்
மாலையில் சபாக்கள் மகிழ்வுடன் நிறையும்!
இசையும் நடனமும் இங்கிதம் காட்ட
ரசிகர்கள் கூட்டம் எங்கும் மொய்க்கும்!
திருவையாற்றில் தியாகராஜர் மண்ணில்
இதயம் நிறைத்திடும் இசைவிழா தொடரும்!
புத்தர் தானும் புனிதர் காந்தியும்
மேலும் பலரும் அவதரித்த மண்ணில்
காலடி பதிக்கக் கனிவுடன் உலகினர்
தேர்ந்தே எடுக்கும் தெளிந்த மாதம் இதுவே!
தணிந்த வெயிலும் தகைவான குளிருமே
வெளிநாட்டினர் அனைவரும் விரும்பும் சூழல்!
இதனைத் தருவது இனிய இம்மாதமே!
தைப் பொங்கலுக்குத் தரணியைத் தயாராக்கும்
மார்கழியைப் பெண்ணுக்கு ஈடாகச் சொல்லிடுவர்!
மார்கழி மாதத்தின் மகத்துவம் அறிந்ததனால்
கார்த்திகை ஒருநாளை (29) கண்ணியமாய் அதற்களிக்கும்!
அடிக்கும் வெயிலும் அதிகரிக்கும் வியர்வையும்
இல்லாத இம்மாதத்தில் எல்லோரும் உழைத்திடுவோம்!
ஒவ்வொரு கையும் உழைப்பை நல்கினாலே
உயரத்தில் நாடு ஒளிபெற்று இலங்கும்!
மக்கட் தொகையில் மகத்துவம் தொட்டதைப்போல்
அனைத்துத் துறையிலும் அகிலம் புகழவே
நிமிர்ந்தே நிற்போம்! நிலவையும் தொடுவோம்!