
காமராஜர் ஆட்சிதானே
காலத்தை வென்றது!
எல்லோர் இதயங்களையும்
என்றைக்கும் நிறைப்பது!
குப்பனுக்கும் சுப்பனுக்கும்
குறைவற்ற மகிழ்ச்சியை
கொடுப்பது ஒன்றையே
குறிக்கோளாக எண்ணியே
வண்டியை நகர்த்தினார்
வரலாற்றை மாற்றினார்!
அல்லிலும் பகலிலும்
அனைவரின் நலத்தையே
மனத்தினில் இறுத்தினார்
மனமுவந்து உழைத்திட்டார்!
கக்கனைப் போன்றோரை
கண்ணியமுடன் நடத்தியே
கனிவான அதிகாரிகளைக்
கைக்குள் வைத்தேநல்
ஆட்சியைக் கொடுத்திட்டார்!
அனைவரையும் கவர்ந்திட்டார்!
அணைகள் விடுதிகள்
அரசுப்பள்ளிகள் என்றே
அத்தனையும் கட்டிடவே
ஆணைகளைப் பிறப்பித்தார்!
முடிவுதேதிக்கு முன்பாகவே
முடித்துவிட்டே வேலைகளை
பண மிச்சத்தையும்
திருப்பித்தந்தனர் அதிகாரிகள்!
எல்லாம் நடந்தது
இப்புனித மண்ணில்தானே!
ஆட்சிகள் மாறியதும்
அரசியலை வணிகமாக்கி…
மக்கள் நலனென்று
மேடைகளில் முழங்கிவிட்டு…
தம்மக்கள் நலனுக்காக
கல்விக்கூடங்கள் திறப்பதும்…
பினாமி பெயர்களில்
பலதோட்டங்கள் வாங்குவதும்…
நிகழ்கால நடப்புக்கள்
நீக்கமில்லை எக்கட்சியும்!
ஆட்சி பறிபோய்
அதிகாரம் குறைந்தபின்பு…
கமிஷன் கரப்ஷனென்று
கமிஷன்களுக்குப் பதில்சொல்லியே
அலைகின்ற கூட்டமே
அகிலத்தில் மிகஅதிகம்!
பலங்கொஞ்சம் குறைந்துவிட்டால்
பக்குவமாய் கூட்டணியை
அறிவித்தே மக்களையும்
ஆக்குகின்றார் முட்டாளாய்!
அப்பப்பா! அரசியலில்தான்
எத்தனை பாதகங்கள்?
பஞ்சமா பாதகங்களையும்
பக்குவமாய் மீறுவதை
சாணக்கியத் தனமென்றே
சங்கடங்கள் மனதிலின்றி
போற்றிப் புகழ்ந்துகொண்டு
புதிராக ஆள்வதையே
நடைமுறை அரசியலாக்கி
நம்மையெல்லாம் வஞ்சிக்கிறார்!
இவையெல்லாம் ஏதுமின்றி
ஏழைகள் நலந்தனையே
எண்ணியே ஆட்சிசெய்த
அவராட்சிதானே நமக்குவேண்டும்!
கட்சிகள் மாறினாலும்
காட்சிகள் கூடினாலும்
காமராஜர் ஆட்சிஒன்றே
கடிதுலகம் வேண்டுவது!
இன்னொருமுறை அவராட்சி
இம்மண்ணில் முகிழ்க்குமானால்
மக்கள் அனைவருமே
மகிழ்வான வாழ்வுதன்னை
அனுபவித்தே மகிழ்ந்திடுவர்
அனைவருமே உயர்ந்திடுவர்!