
கல்லுக்குள் ஈரம்
அது மார்கழி மாதம் அதிகாலை
வைத்துவிட்டு வானொலியில் திருப்பாவை
எடுக்க கதவை திறந்தேன் புட்டி பாலை
படுத்திருந்தது மிதியடியில் ஒரு நாய் குட்டி சுருண்டு
கண்டதும் என்னை எழுந்து நின்றது மிரண்டு
கொண்டு வந்து ஒரு குச்சியை
விரட்ட தான் நினைத்தேன் முதலில் குட்டியை
பார்த்தவுடன் அதன் கண்களில் இருந்த ஏக்கத்தை
மாற்றிக் கொண்டேன் என் எண்ணத்தை
அந்த ஏக்கம் அல்ல வெறும் ஆகாரத்திற்காக
உண்மையில் அது ஒரு ஏக்கம் ஆதரவுக்காக
காலியாய் இருந்தும் தொப்பை
முதலில் அவன் விரும்பியது ஒரு நல்ல நட்பை
வெள்ளை உடம்பெல்லாம் ஆங்காங்கே அழுக்கு
ஒரு கண்ணின் கீழ் அடிபட்டு தட்டியிருந்தது பொருக்கு
எந்த அரக்கன் அடித்திருப்பான் ஒரு குட்டி நாயை கல்லா்
என்ன அவஸ்தை பட்டிருக்கும் குட்டி அந்த புண்ணால்
பொறுக்க முடியவில்லை அதை நினைத்து என்னால்
போக வேண்டாம் நீ எங்கும் தங்கம்
இனி நீ எங்கள் வீட்டின் ஒரு அங்கம்
சொல்லிக் கொண்டு வர போனேன் உள்ளே ரொட்டியும் பாலும்
நீ செய்யும் காரியம் அப்பாவுக்கு பிடிக்காது ஒரு துளியும்
'வேண்டாம் நமக்கு நாயும் நரியும்
சொல்லவேண்டியதில்லை நான் உனக்கே தெரியும்
அனாவசியமாக உன் முதுகு தோல் உரியும்'
அம்மா என்னை எச்சரித்தார்
விட்டு வா குட்டியை எங்கேயாவது என்று நச்சரித்தார்
'அப்படி செய்யமாட்டேன் நீ என்ன சொன்னாலும்
கைவிடப்போவதில்லை குட்டியை என்ன வந்தாலும் '
சொல்லி போனேன் நான் நகர்ந்து
நின்றார் அம்மா ஆச்சரியத்தில் அதிர்ந்து
என்ன ஆச்சு இந்த கிறுக்குப் பயலுக்கு ?
சிங்கத்தை எதிர்க்க எங்கிருந்து வந்தது துணிச்சல் முயலுக்கு
கொடுத்ததும் ஒரு வெந்நீர் குளியல் தீர்க்க
கோடீஸ்வரன் வீட்டு நாய் போல் ஆகி விட்டான் பார்க்க
வைத்து ஒரு பெயர் வெள்ளை
சொன்னேன் அம்மாவிடம் இவனும் இனி உனக்கொரு பிள்ளை
பார்க்க வேண்டும் அவர் முகத்தில் வெடித்த எள்ளை, கொள்ளை
அப்பா வந்தார் ஊரிலிருந்து மறு வாரம் ஒரு காலை
பவ்யமாய் எழுந்து நின்று ஆட்டியது குட்டி தன் வாலை
'வெடிக்கப்போகிறது எரிமலை கேட்கவில்லை நீ சொன்னால்'
சொல்லி அம்மா ஒளிந்து கொண்டார் சமையலறை கதவுக்கு பின்னால்
முதலில் அப்பாவின் முகம் வெட்டுப்பாறையென இறுகியது
பின்பு திடீரென்று வெல்ல பாகு போல இளகியது
உறுமி உறுவுவார் என்று பயந்தோம் தன் உரையிலிருந்து வாளை
இருக்கட்டும் என்று சொல்லி போய்விட்டார் உயர்த்தி தன் தோளை
கேட்டிருக்கிறேன் பழமொழி கல்லுக்குள்ளும் உண்டு ஈரம்
அப்போதுதான் புரிந்தது உண்மை என்று அது எவ்வளவு தூரம்