
நிழல் விடுத்து நிஜத்திற்கு
அப்பா இறந்துவிட்டதைப் போன்று
அடுத்தடுத்து இரண்டு கனவுகள்
அதிகாலையில் வந்தது.
முதல் கனவில்
இருதயத்தாக்கு ஏற்பட்டு
ஆஸ்பத்திரிக்கு செல்கிற வழியில்
இறந்துவிடுவது போலவும்
இரண்டாம் கனவில்
தூக்கத்திலேயே உயிர்
பிரிந்துவிட்டதைப் போலவும்
கனவுத்திரை விரிந்திருந்தது.
முதல் சாவில்
நான் அழவே இல்லை.
இரண்டாம் சாவில்
துக்கம் தொண்டையை அறுக்க
நிகழந்த சாவை
விவரித்துக் கொண்டிருந்தேன்.
கனவுப் பலன்களில்
நம்பிக்கையற்ற அப்பாவிடம்
இதையெல்லாம் சொல்லிச் சிரிக்க
ஆசைதான்.
நிதர்சனமான நிஜத்தில்
அப்பா இறந்து போய்
இன்றோடு பதினாறு நாளாகிறது.