
கரைகளற்ற வானம்
பேரண்டத்தின்
பரவெளி
முதலும் முடிவுமில்லா
ஒரு வெளி!
இல்லை ஆனால்
இருக்கிறது
நீளமான நீலம்!
உலகம் முழுமைக்கும்
விரிந்து நிற்கும்
ஒரே போதி மரம்!
தலை கோதித்
தாயாய்
அந்தி வானம்!
குயிலோடு
பூபாளம் பாடி
துயிலெழுப்பும்
ஞானகுருவாய்!
வைகறை வானம்!
வறுமையாய்
வெறுமையாய்
வெற்று நன்பகல் வானம்
தோளோடு
தோள்சேர்த்து
சோகமது பகிர்ந்திடும்
நண்பனாய்
கடற்கரை வானம்!
கவிஞருக்கும்
காதலருக்கும்
ஈரமிகு
எழில் களமாய்
கார்கால வானம்!
நிலா தேவதை
நகர்வலம் போக
இராஜபாட்டையாய்
பால் வீதி வானம்!
கரைகளற்ற
வானமென்று
அறியாத
வயதிலும்
கரைகளற்ற
வானமென்று
அறிந்திட்ட
வயதிலும்
விரிந்திடும்
வியப்பிற்கோர்
எல்லையே
இல்லையே!