
ஆம்னி பேருந்தில்
பொங்கலுக்கு ஊர் போக
ஆசைப்பட்டான்
ஏழு வயது மகன்!
சித்தாள் வேலையின் பணம்
ஆயிரத்து ஐநூறு இருந்தது!
ஆம்னிக்கு இன்னும்
மூவாயிரத்து ஐநூறு வேண்டுமே!
குடிகார தாலியும் மஞ்சக்கயிறாய் மாறி வருடமாகி போச்சு!
மகனுடன் கோயம்பேடு வந்தாள்!
அரசு பேருந்தை பார்த்தவனுக்கு
அதிர்ச்சி!
ஆம்னி பஸ்ஸில் தான்
வருவேன் என்றவனை
சாக்லேட் முட்டாய் மடைமாற்றியது!
பேருந்து ஓடிய சிறிது நேரத்தில் பக்கத்திலேயே ஆம்னியும் வந்தது!
திரை விலக்கி கண்ணாடி வழியே பார்த்தான் அவனை ஒத்த வயசு சிறுவன்!
மூக்கு சுளித்து புன்னகையுடன் கையசைத்தான் இவன்!
'ஆம்னி பஸ்ஸில் ஏசி இருக்குமாம்மா?'
என்றவனின் வினவலில்
ஆசை தெரிந்தது!
'அது ரொம்ப குளிரும்பா'
என்றவளின் குரலில் இயலாமையின்
வெறுப்பு!
'ஆமாம்மா! நமக்கு அது சரி வராது' பெரியவனாட்டம் பேசினான்
அவன்!
முந்தானையால் அவனை அணைத்து
தலைகோதினாள்
அவள்!
ஆற்றாமையின் வெளிப்பாடாய்
நெஞ்சம் விம்பியது அவளுக்கு!
பூகம்பமாய் வெடித்த அழுகை
குரல் வளையை பிய்த்துக்கொண்டு வெளிவர
மேல் உதட்டை
கீழ்தாடை பற்களால்
கடித்து மதகாக்கினாள்!
தொலைக்காட்சியிலோ
அரசியல்வாதி பேசிக் கொண்டிருந்தார்
'ஆம்னி பேருந்தின் விலையேற்றம் ஏழைகளை பாதிக்காதென்று!'
அவளின் வாய்க்குள் அடங்கிய சத்தம்
இதயத்தின் ஆரிக்கிளையும் வெண்ட்ரிக்கிளையும்
மெதுவாக வெடி வைத்து தகர்த்துக்கொண்டிருந்தது!