
புதிதாய் வருவது எதுவென்றாலும்
புளகாங்கிதம் மனம் நிறைக்கும்!
அறுபது ஆண்டுகள் சைக்கிளை
அன்றைக்கே தமிழ்த் தாத்தாக்கள்
சொல்லி வைத்துச் சென்றார்கள்
சுகம் தரவே நினைந்தார்கள்!
பிரபவ ஆண்டில் தொடங்கி
அட்சய வரையிலான வருடங்கள்
ஆறு பத்தென்று அழகியகணக்கினையும்
போட்டுக் கொடுத்துச் சென்றார்கள்
புகழுடைய நம் முன்னோர்!
குரோதி தன் பயணத்தைக்
குறையின்றி முடித்துக் கொண்டு
விசுவாவசுவை விரைந்து அழைக்கின்றது!
நாமும் அதை வரவேற்று
நல் வாழ்த்து கூறிடுவோம்!
முப்பத்து ஒன்பதாம் இடத்தில்
முத்தாப்பாய் நம் விசுவாவசு
வீற்றிருந்தே நம் அனைவருக்கும்
விருப்பம்போல் நல்வாழ்வு தனை
வழங்கிடவே வந்து விட்டதே
வாழ்வினிமேல் செம்மை தானே!
முன்னேற்றம் நாம் பெற்றிடவே
முயற்சிகளை முடுக்கி விட்டு
அயற்சிதனைப் போக்கி விட்டு
விசுவாசம் மனதில் கொண்டு
விருப்பமுடன் நாம் உழைத்திட்டால்
உலகே நிறைவு பெறும்
உள்ளங்களில் மகிழ்ச்சி பொங்கும்!
விசுவாவசு ஆண்டு என்றாலே
உலகநிறைவு தான் என்று
உயர்மதியோர் சொல்லி வைத்தார்!
அப்பப்பா! நம் முன்னோர்க்கு
அகம் முழுதும் மூளைதானோ!
எப்பப்ப வருடங்கள் இனிதாகும்
என்பதையும் நாம் அறிந்திடவே
மூன்றாகப் பகுத்து வைத்தார்
முழுதான அறுபது தனையும்!
உத்தமம் மத்திமம் அதமம்என்றே
அதற்குப் பெயரிட்டு ஆவனஉரைத்தார்!
மத்திமத்தில் வரும் விசுவாவசுவுடன்
உத்தமமான நம்முழைப்பும் சேர்ந்திட்டால்
சித்திரைப்பெண்ணே சிரித்து மகிழ்ந்து
உச்சந்தலையில் உயர்கரம் பதித்து
ஏச்சு பேச்சு இத்யாதி
போக்கி நம்பகழ் புவியில்பரவ
அச்சாய் மனதின் ஆழம்பதிந்து
நிச்சயம் நிற்பாள் நீளுலகுபோற்ற!
விசுவாவசுவை விரும்பி வரவேற்போம்!
கவிதையாய் வாழ்வு தன்னை
களிப்பு மிகக் கொண்டே
காதலை வேலையை கனிவானபெற்றோரை
போற்றி வாழ்ந்தே நாம்
புகழ் பரப்பிடுவோம் புவியினிலே!