

அன்பும் அமைதியும் அகிலத்தில் நிலவிடவே
ஆலயங்களை அமைத்தார் அரியநம் முன்னோர்!
ஆலயம் தொழுவது சாலவும் நன்றென்றும்
கோயிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாமென்றும்
எந்தக் கோயில் ஆனாலும் தெய்வம் தெய்வமென்றும்
எந்தத் தெய்வம் ஆனாலும் கோயில் கோயிலென்றும்
ஒவ்வொருவர் மனதிலும் உறைகின்ற விதமாக
எடுத்தே சொன்னார்கள் ஏதமறியா நம் முப்பாட்டன்கள்!
தினமும் ஆலயம் செல்வது இயலாததென்றாலும்
பண்டிகை தினங்கள் பரணி கார்த்திகைகளில்
கோயில் சென்று கும்பிட்டபின் இறைவனை
இனம் மதம் பார்க்காது இனிய நண்பர்களுடன்
கூடிப் பேசி குதூகலம் மிகக் கொள்ளவே
மாதா கோயில் மசூதி மற்றைய கோயில்களென்று
அருகருகே அவர்களும் அமைத்தே வைத்தார்கள்!
அன்வரும் மாணிக்கமும் அன்புடனே இணைந்ததனால்
பாட்ஷா படம் நாட்டில் பட்டையைக் கிளப்பியது!
ஆண் பெண் என்றே அறிவியலின் க்ரோமோசோம்கள்
அடையாளம் காட்டலன்றி சாதி மதங்களை அது
சத்தியமாய்க் காட்டாது!
விஞ்ஞானமும் அதனை விஞ்சித்தும் ஏற்காது!
வீம்பு பிடித்த மனிதர்களின் வேண்டாத விளையாட்டில்
விளைந்தவையே சாதியும் சங்கடமேற்படுத்தும் மதமும்!
இதனையேற்றால் என்றுமில்லை இங்கு துயரம்!
எங்கே எப்போது எப்படித்தான் தீபம் ஏற்றுவதென்று
வகுத்தே வைத்துவிட்டார் வாதறியா நம்முன்னோர்கள்!
போட்ட நல்கோட்டின்மேல் போகாது நாமுந்தான்
வம்பினையே வாங்கிடவே வரிந்துகட்டி நிற்கின்றோம்!
ஆளும் அரசியல்வாதிகளே! அரிதான உயர் அதிகாரிகளே!
உங்கள் அரசியலை உயர்வான கோயில்களில்
கொண்டு சென்றே அமைதியினைக் குலைக்கப் பார்க்காதீர்!
எந்த ஆண்டவருக்கும் இஷ்டமில்லை உங்கள் அரசியலில்!
நட்பாய் உறவாய் நல்லது கெட்டதுகளில்
கைகோர்த்து நிற்பதையே கச்சிதமாய் நாம் ஏற்போம்!
அல்லாவும் ஜீஸசும் அரிசிவனும் கடவுளர்கள் தான்!
பேகமும் மேரியும் பெத்தம்மாவும் பெண்டிர்தான்!
மெத்தப் படித்தோரே! மேலான பதவிகளில் இருப்போரே!
இறையின் பெயர்சொல்லி எங்கள் இதயங்களைக் கொல்லாதீர்!
கடவுள் ஒருநாளும் கடமை தவற மாட்டார்!
அவர் பெயர் சொல்லி இங்கு அமைதியைக் குலைக்காதீர்!
ஆண்டவரே! அமைதிக்காய் உம் ஆலயம் தேடிவந்தால்
அங்கும் அரசியலாம்! அதனை விலக்கி விட்டு
எம்மைக் காத்திடுவீர்! எம் இதயங்களில் பால்வார்ப்பீர்!