
போர்தொடுத்தல் மூலமாக
போய்விடுமா தீவிரவாதம்?
எந்த யுத்தமுமே
எதிர்பார்க்கும் அமைதியினை
வழங்கியதாய் வரலாற்றில்
வரவில்லை ஒருநாளும்!
அப்பாவி மக்களையே
அல்லற்படுத்திக் கொல்வதன்றி
வேறெந்த நற்பயனும்
விளைந்ததாய் சரித்திரத்தில்
சான்றுகள் ஏதுமில்லை!
சங்கடங்கள் தீர்ந்ததில்லை!
பஹல்காம் கொலையாளிகள்
பத்திரமான இடந்தனிலே
பதுங்கியே இருப்பார்கள்!
பக்குவமாய் காய்நகர்த்தி
தப்பிக்கும் வழிமுறையைத்
தக்கவைத்துக் கொள்வார்கள்!
பார்டர்வாழ் ஏழைகளோ
பதுங்குகுழி தோண்டி…
உடலையும் உள்ளத்தையும்
ஒருசேர வருத்திக்கொண்டு…
தூக்கம் தொலைத்துவிட்டே
துக்கமுடன் தவிப்பார்கள்!
இருபத்தியாறு பேரை
இரக்கமின்றிக் கொன்றுபோட்ட
விலங்குளை அடையாளம்
விரைவாகக் கண்டபின்பு…
பின்லேடனைத் தூக்கியதுபோல்
பிழையின்றி ஒழிக்கவேண்டும்!
அப்பாவி மக்கள்மீது
அணுக்குண்டு போடுவதால்
அவலந்தான் மிகஓங்கும்!
ஆயுதங்கள் விற்போரின்
கம்பனிகள் செழித்தோங்கும்!
கவினுலகோ அவதியுறும்!
மக்களை மக்கள்கொல்லும்
மாபாதகமே போரென்பது!
பிறப்பைப்போல் இறப்பும்
இயற்கையாய் அமையவேண்டும்!
சண்டையென்றும் வெல்லாது!
சமாதானமதோ தோற்காது!