
கட்சியின் கிளை செயலாளர்
காது கடுக்கனின் மகள்
வேறு சாதி இந்திரனை
காதலித்தாளென
தலைவரும் மற்றவரும்
அவனை
கேள்விக் கணைகளால்
துளைத் தெடுத்தனர்!
சாதி மானம் காப்பதற்காக
இந்திரனை
அடித்து துவைத்து
ஊரை விட்டு
துரத்தி விட்டான் கடுக்கன்!
தலைவரிடமிருந்தும்
மற்றவர்களிடமும்
புகழ் மாலை கிடைத்தது!
மாறாக
மண வாழ்க்கையை
வெறுத்தாள் மகள்!
வரும் வரனையெல்லாம்
தட்டிக் கழித்தாள்!
செயவதறியா மனைவி
கடுக்கனிடம்
வாதம் செய்தாள்!
தினம் தினம் சண்டை தான்!
இந்திரனுக்கு
மகளை
கட்டிக் கொடுக்க வேண்டுமென்றாள்!
கோபத்தில்
மனைவியை வெட்டி சாய்த்தான்!
சாதிப் பெருமையை
காப்பாற்றியதற்காக
உறவினரும் சுற்றத்தினரும்
பெருமை பொங்க
பாராட்டி பேசினர்!
பெருமையில் திளைத்தான்
காது கடுக்கன்!
சட்டைக்காலரை தூக்கிக் கொண்டான்!
மகள் நடை பிணமானாள்!
ஒரு வருடத்திலேயே
தலைவரின் மகள்
வேறு சாதிக்காரனோடு ஓடிப்போனாள்!
மனைவியின் உத்தரவை
மீற முடியா தலைவர்
இங்கிருந்தே மகளை வாழ்த்தினார்!
கடுக்கனுக்கு
இப்போது தான்
மண்டையில் உரைத்தது!
ஆறுதல் சொல்ல
மனைவி யின்றி
தினம் தினம் அழுது படுக்கையிலானார்!
கதவருகே கட்டிலில் தான்
வாசம்
சுவாசம்.....
எல்லாம்!
நாட்கள் ஓடியது!
பிறிதொரு மழை நாளில்
கதவு தட்டும் சத்தம் கேட்டு
வாசலை பார்த்தார்!
கண்களில் சந்தோஷம்!
இந்திரன் தான் வந்திருந்தான்!
'வாங்க' என்று வாயார கூப்பிட்டவர்
மகளை
பாயாசம் வைக்க சொன்னார்!
'உள்ளே போங்க மாப்பிள்ளை'
என்றவரின் கைகள்
வாசல் கதவை சாத்தியது!
***********