

“சாவித்திரி! மழை வரும்போல இருக்கு. நான் இன்னைக்கு திண்ணையில படுக்க முடியாதுன்னு நினைக்கிறேன். காத்து வேற பலமா வீசறதால சாரல் அடிக்குது” என்ற சிவராமனிடம்,
“ஆமாமாம் உள்ளேயே படுங்க சாரல்ல படுத்துட்டு அப்பறம் சளி புடிச்சிட்டு அவஸ்தைப்பட முடியாது,” என்றாள் சாவித்திரி.
“அது சரிதான் ஆனா நம்ப லஷ்மி பசு இன்னிக்கு கன்னு போட்டுடும்னு தோணுது. ஒரு மாதிரியா சொணக்கமா நிக்குது அதான் வேலுவை ராத்திரிக்கு வந்து இங்கேயே படுக்கச் சொன்னேன். அவனையும் இன்னும் காணும். நானும் உள்ளே படுத்திட்டா சரியா வருமான்னுதான்..” என்று இழுத்தவர், “சரி அந்த டார்ச் லைட்டைக் கொஞ்சம் கொண்டு வந்து கொடேன் ஒரு எட்டு கொட்டகைக்குப் போய் பார்த்திட்டு வந்திடறேன்,” என்றார்.
“இந்தாங்க” என லைட்டுடன் குடையையும் நீட்டினாள் சாவித்திரி, “மழையில நனைஞ்சுடாதீங்க” என்றபடி.