

“எவ்வளவு முட்டாள்தனமா நடந்துகிட்டு இருக்கேன்னு புரியுதா உனக்கு. அவதான் புரியாம ஏதோ பயத்தில உளறினாள்னா நீதான சுதாகரிப்பா இருந்திருக்கனும். இங்கே நம்ம ஊர்ல டாக்டர் யாரும் கிடையாது. பக்கத்திலே ஆஸ்பத்திரியும் கிடையாது. இதெல்லாம் உனக்குத் தெரியாதா. பிரசவம்ங்கறது மறுபிறவி மாதிரி இல்லையா. இதில இத்தனை அலட்சியமா இருக்கலாமா?” என அவனிடம் தன் அங்காலயிப்பைக் கொட்டிக் கொண்டிருந்தவர், “கடவுளே! நீதான் அந்தப் பொண்ணுக்கு நல்லபடியா பிரசவம் ஆகி தாயும் குழந்தையும் நல்லபடியா காப்பாத்தித் தரனும்” என்று மனமுருகி பிரார்த்திக்கத் தொடங்கிவிட்டார்.
அதே நேரம் உள்ளிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்க, இருவரும் ஆர்வம் பொங்க உள்ளறையை நோக்கித் திரும்ப,
“பெண் குழந்தை பிறந்திருக்குங்க” என்று முகம் கொள்ளாச் சிரிப்புடன் கணவரிடம் சொல்லிவிட்டு உள்ளே ஓடினாள் சாவித்திரி.
“கடவுளே! உனக்கு கோடி நன்றி” என்றவர், “மூத்தது உனக்கு பையன்தானே?” என்றார் முருகனிடம்.