

நேரம், சரியாக இரவு எட்டு. டொக்… டொக்… டொக்... அந்தப் பங்களாவின் கதவைத் தட்டியது, ஒரு இளவயது புதுமணத் தம்பதி. கதவு திறப்பார் இல்லை.
மீண்டும் வேக வேகமாகத் தட்ட, எதிர்வீட்டு ஏகாம்பரம்தான் வெளியில் வந்தார்.
“தம்பி, கதவைத் தட்டினா எல்லாம் அவருக்குக் காதுல விழாது. நீ அந்த இரும்பு கேட்டிலயே சிறு பட்டன் இருக்கும் பாரு. அதை அழுத்தி அழை,” என்றார்.
"நன்றிங்க" என்றவன் அந்தப் பட்டனைத் தேடி அழுத்தவும், உடன் கதவு திறக்கப்பட்டது. ஒரு பெரியவர் வயது எழுபது, பார்ப்பதற்கு ஐம்பது வயது தோற்றம். கதவைத் திறந்தார்.
‘‘அய்யா வணக்கமுங்க.”
“யாரு தம்பி நீங்கல்லாம்? என்ன வேணும்? ஏன் இந்த நேரத்துல என் வீட்டு கதவைத் தட்டினே?”
“அய்யா உண்மையைச் சொல்லட்டுங்களா...? காப்பாத்துவீங்களா?”
“ஓ... புரிஞ்சுபோச்சு. நீ சின்னஞ்சிறிய வாலிபன். அவள் நீ புதுசா திருமணம் செய்துகொண்டிருக்கும் உன் மனைவியாகத்தான் இருக்கவேண்டும். இதில்தான் ஏதோ குழப்பம் இருக்கிறது. சரி... நான் காப்பாற்றுகிறேன். விவரமா நீ சொல்லு. என் அனுமானம் சரியானதுதான்னு சொல்லு,” என்றார் பெரியவர்.
“ரொம்ப சரியாகச் சொன்னீங்க. கல்யாணம் ஆயி ஒரு மணி நேரம்தான் ஆகுதுங்க. அதுக்குள்ளாற எங்களைக் கொல்வதற்கு ஆட்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். தப்பித்து ஓடி ஓடி களைத்துப் போனோம். ஒரு டீகூட குடிக்க முடியலீங்க. அப்பத்தான் உங்க வீட்டு கேட்டைப் பார்த்தோம். இது நல்ல உயரமா இருந்ததாலே, இங்கே அடைக்கலம் புகுந்தால் தப்பிக்கலாம் என்று நினைத்துதான் கதவை அந்தத் தட்டு தட்டினோம். சத்தம் கேட்டு எதிர் வீட்டுக்காரரே வந்து, கேட்டில் இருக்கும் பட்டனை அழுத்தினால், நீங்கள் திறப்பீர்கள் என்றார். அப்படித்தான் செய்தேன் அய்யா. நீங்களும் திறந்துவிட்டீர்கள்," என்றான் அவன்.