சிறுகதை: 'வேலையில்லாப் பட்டதாரி'

Man with baby
Man with baby
Published on

திருச்சி ஜங்ஷன் பிளாட்பாரம்.

அரைகுறையாய் இருட்டு.. அங்குமிங்குமாய் வெளிச்சம் என கலவையில்.

தோளில் தொங்கிய பையுடன், நெல்லை செல்ல, வந்து நின்ற 'நெல்லை அதி விரைவு - S5' பெட்டியைத் தேடி அடைந்தான், வேலையில்லா பட்டதாரி... மோகன்.

பெட்டியில் ஏறியவன், உள்ளேயிருந்த கல்யாணக் கும்பலைக் கண்டு, "ம்ஹூம், இன்னிக்கு தூக்கம் போச்சு. நமக்கு எங்கே போனாலும் விடிவுகாலம் இல்லை." மனம் நொந்தவனாய் மேல் பெர்தில் ஏறிப்படுக்க, புறப்பட்டது வண்டி.

அடுத்து வரப்போகிற திண்டுக்கல்லில் அவர்கள் இறங்க, இப்பவே ஆயத்தமாவது காதில் விழுந்தது.

இலேசாய் தூங்கியவன், அவர்கள் இறங்கும் சத்தம் கேட்டு, அரைகுறையாய் விழித்தான்.

"அப்பாடா. ஒரு வழியா கல்யாணக் கும்பல் இறங்கிருச்சு!"

மொத்தப் பெட்டியே காலியாகும் சத்தம் கேட்டு, உள்ளுக்குள் சந்தோசப்பட்டாலும், அந்த மகிழ்ச்சி அரை மணி நேரம் கூட நீடிக்கவில்லை.

மறுபடியும் தூக்கம் கலைந்தான்...

"மே... அம்மே" ஒரு குழந்தையின் அழுகுரல். பதறிப்போய் மேலிருந்து எட்டிப் பார்க்க கீழே யாரும் இல்லை.

ஆனால், சத்தம் சற்று தள்ளி வர, இறங்கித் தேடினான்.

பெட்டியில் இரண்டு அடுக்கு தள்ளி, சிறிய குழந்தை ஒரு போர்வைக்குள். ஆறு முதல் எட்டு மாதம் வரை இருக்கலாம்.

அந்தக் கல்யாண கும்பல் தான்... அவசரத்தில் விட்டுப் போயிருக்கவேண்டும்.

பெட்டியில் யாருமே இல்லாத நிலையில் குழந்தையின் அழுகை ஒலி கூட, இவனுள் ஒரு பதட்டம் பற்றிக் கொண்டது.

மெல்லப் போர்வையை விலக்கி குழந்தையை வெளியே எடுத்தான் மோகன்.

குழந்தையின் கழுத்தில் 2 அல்லது 3 பவுன் செயின்.

குழந்தை மேலும் அழ முயல, சுற்றுமுற்றும் பார்த்தவன் ஜன்னல் கதவை திறந்து காற்று உள்ளே வர உதவினான்.

"அடப்பாவிகளா, பெற்ற குழந்தையைக் கூட கவனிக்காமலா இப்படி அவசரம் அவசரமாய் இறங்குவார்கள்?" முகம் தெரியாதவர்கள் மீது கோபம் கொப்பளித்தது... மோகனுக்கு.

அதற்குள், குழந்தைக்கு அழுது, அழுது... மூச்சு திணறல் வர, மெதுவாய் தோளில் சாத்தி தட்டிப் பார்த்தான். குழந்தை சமாதானம் ஆகவில்லை.

வீட்டுக்கு 'போன்' போட்டு, அம்மாவை எழுப்பி, குழந்தையை எப்படி சமாதானப்படுத்த என்று கேட்டால்... இல்லை... இல்லை... அம்மா, "உனக்கு இது தேவையான்னு?" சத்தம் போடுவாங்க.

மோகன் மனதில் ஒரே குழப்பம்.

மனதிற்குள் தனது தாய், அண்ணன் குழந்தையை சமாதானம் செய்த விதம் நினைவுக்கு வர, 'சட்' டென தன் கட்டை விரலை வைத்தான் குழந்தையின் வாயில்.

குழந்தை சப்புக் கொட்டியபடியே லேசாய் அமைதி அடைய, அடுத்து வரும் மதுரை ஜங்ஷனில் தகவல் தெரிவிக்க தயாரானான் மோகன்.

மதுரையில் வண்டி நுழைந்த மறுநிமிடம்... 'தட, தட' வென போலீஸ்... ரயில்வே ஊழியர்கள் ஓடி வந்தனர்.

மோகன் கையில் குழந்தையுடன் 'திரு, திரு' என முழிப்பதைக் கண்டதும், "விடாதே பிடி, பிடி, குழந்தை திருடன்" பாய்ந்து வந்த கான்ஸ்டபிள் ஒருவர், இவன் சட்டைக் காலரைக் கொத்தாய்ப் பிடிக்க, மற்ற சிலர், இவனை வேகமாய் நடைமேடைக்கு தள்ளி, தாக்கத் தயாரானார்கள்.

மோகனுக்கு முதலில் குழப்பம்... அடுத்து பயம்.

"சா... சார்..., இருங்க. நான் எங்கேயும் போகலை" சொல்லி முடிக்குமுன் சட்டென இறங்கியது ஒரு குத்து முகத்தில்.

'குபுக்' இலேசாய் வாயில் இரத்தம் கொப்பளித்தது.

கண்களில் கிளம்பிய கண்ணீர் ஒருபுறம்... தடுமாறிப் பேசினான் மோகன்.

"மு... முதல்ல, குழந்தைக்கு குடிக்க பால் ஏற்பாடு பண்ணுங்க. பாவம், அது பசியில அழுகுது."

நல்லவேளையாய் நடைமேடையில் நின்ற ஒரு பெண்மணி பால்புட்டியோடு வர, கூட்டம் சற்று அமைதியானது.

'விசாரணை' என்ற பெயரில் மோகனை, ஸ்டேஷனுக்கு போலீஸ் நகர்த்த, நெல்லை எக்பிரஸ் 10 நிமிட தாமதத்தில் கிளம்பிப் போய் விட்டது.

"ம், எல்லாம் என் தலைவிதி. என் விதி என்னைய எங்கேயும் விடாது. திருநெல்வேலி போக வேண்டியவன்... இப்படி திருடனாய் மதுரையில்" தலையிலடித்துக் கொண்டான் மோகன்.

கோபமாய் குழந்தையைப் பார்க்க பசியாறின மகிழ்ச்சியில் தன் 'பொக்கை' வாயைத் திறந்து சிரித்தது குழந்தை.

சிறிது நேரத்தில், பொழுது விடிய... பதட்டமாய் அதே கல்யாண கும்பல், போலீஸ் ஸ்டேஷனுக்குள் படையெடுத்தது.

கதறியவாறு வந்த ஒரு பெண்மணி, குழந்தையை வாரி எடுத்து, முத்தம் கொடுத்து வாய் விட்டுக் கதறினாள்.

அவள் தான் தாய் எனப் புரிந்தது மோகனுக்கு.

மனம் போனபடி அவளைத்திட்ட மோகன் நினைத்தாலும், அவனுடைய நிலையே பரிதாபம்... பாவம்.

குழந்தையின் கழுத்தில் கிடந்த நகை உள்பட 'எல்லா' விசாரணையும் அவர்கள் முன்னிலையில் மோகனிடம் போலீஸ் நடத்தியது... மீண்டும்.

கூட்டத்திலிருந்து, கழுத்து நிறைய சங்கிலியுடன் தெரிந்த மனிதர், கூட்டத்தை விலக்கியபடி முன்னால் வந்து, "தம்பீ, எங்க வயித்தில பால் வார்த்தீங்க. ரொம்ப பெரிய காரியம் பண்ணினீங்க. இந்த பச்சைக் குழந்தையை, பால்மணம் மாறாத குழந்தையை, காப்பாத்திட்டீங்க. இந்த குழந்தை மட்டும் கிடைக்கலைன்னா, இன்னிக்கு காலையில பத்து மணிக்கு நடக்க இருக்கும் என் பொண்ணோட கல்யாணம் நின்னு போயிருக்கும்." மேலும், வார்த்தை வராது, மோகனின் கைப்பற்றி அவர் அழ, நிமிஷத்தில் நெகிழ்ந்து போனான் மோகன்.

"தம்பீ, என் பெயர் அருணாச்சலம். திண்டுகல் 'அருணாசலம்' பேப்பர் மில். கேள்விப்பட்டிருப்பீங்கன்னு நினைக்கிறேன். அந்தப் பெரிய பேப்பர் மில்லோட உரிமையாளர் நான்," என தன்னை சுருக்கமாய் அறிமுகப் படுத்திக் கொண்டவர், 'பட பட' வென இவனை விசாரித்தார்.

'சட்' டென தன் பர்ஸிலிருந்து 'விசிட்டிங் கார்டு' எடுத்தவர், "தம்பி, நீங்க செய்த உதவிக்கு நான் ஒரு சின்ன உதவி செய்ய விரும்புறேன். உங்க நிலைமை எனக்கு புரிஞ்சுருச்சு. இந்த கார்டோட ரெண்டு நாளைக்கு அப்புறம், போன் பண்ணிட்டு என் ஆபீஸுக்கு வாங்க. உங்க படிப்புக்குத் தகுந்த வேலை தர்றேன். உங்களுக்கு தெரியாம நடந்த அவமரியாதைக்கு, எல்லோர் சார்பா மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்."

சொன்னவர் மோகனை பார்த்து பெரிய கும்பிடு போட, கூட இருக்கும் கும்பலும் கும்பிடு போட்டது.

நடந்தது எல்லாம் ‘கனவா?’ இல்லை ‘நினைவா?’ எனத் தடுமாறிய மோகன்,

குழந்தையை நன்றியுடன் பார்க்க...

அது அப்போதும், தன் பொக்கை வாயைத் திறந்து சிரித்தது குஷியாய்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com