

கமலத்துக்குப் பெருமை பிடிப்படவில்லை. அமெரிக்காவில் வேலை பார்க்கும் அவள் மகன் சுந்தர், கமலமும் அவள் கணவர் ஜெயராமனும் அமெரிக்கா வர விமான டிக்கெட் வாங்கிவிட்டான் என்பதைக் கேட்டதிலிருந்து அவளுக்கு மகிழ்ச்சியில் கால் தரையில் படவில்லை.
அன்று முதல் பரபரப்பாக வெளிநாட்டுப் பயணத்துக்குத் தங்களுக்குத் தேவையான சிலவற்றையும் மகன் மருமகளுக்குக் கொடுக்க எனவும் கமலம் பொருட்களை வாங்கிக்குவித்தாள். ஒருவழியாக எல்லாம் பேக் செய்து பயணம் செல்ல குறித்த நாளும் வந்தது.
முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால் சொந்தபந்தங்கள் விமான நிலையம் வந்து வாழ்த்து கூறி வழி அனுப்பி வைத்தனர். சென்னையில் புறப்பட்டு இருபத்தி எட்டு மணி நேரம் பயணித்து அமெரிக்காவின் நாஷ்வில் நகருக்கு வந்து சேரும்போது இருவரும் மிகவும் சோர்ந்துதான் போனார்கள். மகனையும் மருமகளையும் விமான நிலையத்தில் பார்த்ததும்தான் உற்சாகமடைந்தனர். இருவருக்கும் அந்தப் புதிய காலசூழ்நிலை ஊரின் வனப்பு, எங்கு நோக்கினும் சுத்தம், மாறுதலான மனிதர்கள் என அனைத்தும் மிகுந்த வியப்பை அளித்தன.