

குரு, கோயில் வாசலில் புலம்பிக்கொண்டு இருந்தான்.
“தம்பி இங்க எதுக்கு கத்திக்கிட்டு இருக்க, உள்ள போ! பகவான் கிட்டச்சொல்லு, இல்ல வேற எங்காவது போ” என்றார் பட்டாசாரியார்.
“நா எங்க இருந்தாலும் ஏதாவது சொல்ல வந்துருங்க. போங்க சாமி... உங்க வேலையப் பாருங்க. எனக்குத்தான் வேலை இல்லை,” என்றான் குரு.
வேலை கிடைக்காத கவலையில் எல்லோரிடமும் சண்டைபோடுவது என இருந்தான்.
அப்பாவிற்கு உடல்நிலை சரியில்லாததால் பக்கத்திலிருக்கும் ‘நலம் மருத்துவமனைக்கு’ நலம் பெற அழைத்துச் சென்றான். அண்ணன் அனுப்பும் பணம் ஏதோ, அவா்களை நடமாட வைத்துக்கொண்டிருக்கிறது.
பெயா் பதிவிட்டதும் டோக்கன் எண் 5 கிடைத்தது. வேகமாக அப்பாவைக் காட்டிவிட்டுச் சென்றிடலாம் என நினைத்துக்கொண்டான் குரு.
அங்கு, இருக்கும் நோயாளிகள் இரும்பும்போதும், தும்பும்போதும் அவன் இதயம் வேகமாக துடித்தது. ‘நமக்கு எதுவும் வந்துவிடுமோ, நம்மளும் படுத்துட்டா அவ்வளவுதான். அப்பா என்ன திட்டித் தீத்துடுவாறு. சும்மாவே வேலைக்குப் போகாத உதாரினு கத்துறாரு’ என கண்ணைமூடி புலம்பிக்கொண்டு இருந்தான். இருமல் சத்தம் அமைதியானதும் மெதுவாக கண்ணைத் திறந்தான். அனைவரும் குருவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.