சிறுகதை: ஏஐ (AI) மாப்பிள்ளை!

AI Mappillai love story
AI Mappillai tamil short story
Published on
Kalki strip
Kalki strip

“எங்க அம்மாவுக்குப் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு! ஏஐ மாப்பிள்ளை தான் வேணுமாம்” என்று சிவாவிடம் கவலையோடு சொன்னாள் தேவி.

“என்ன?” என்று திகைப்புடன் கேட்ட சிவா, "எப்படி இந்த பிடிவாதம் உங்க அம்மாவுக்கு வந்தது? அப்ப நம்ம காதல் என்ன ஆகும்?” என்றான்.

“எங்க அம்மாவோட பிரெண்டெல்லாம் தங்கள் பெண்களுக்கு ஏஐ வெப்சைட்டில் மாப்பிள்ளை பார்க்கறாங்களாம்! ஏஐ இருக்கே, அது எல்லாத்தையும் அலசி ஆராய்ந்து தகுந்த மாப்பிள்ளையை செலக்ட் பண்ணிடுமாம். எல்லா அம்மாமார்களுக்கும் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் யுகத்திலே பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. எங்க அப்பாவோட பேச்சையும் கேட்கறதில்லை. இப்ப என்ன செய்யறது?”

“இதோ பார் தேவி! நமக்குள்ளே ஜாதி பிரச்னை இல்லை. ஒரே ஜாதி. அந்தஸ்து பேதமும் இல்லை. இரண்டு பேரும் ஒரே கம்பெனியில் நல்ல சம்பளத்திலே தான் வேலை பார்க்கிறோம். என்கிட்ட கார் இருக்கு, சொந்த வீடும் இருக்கு. வயசும் சரியா அமைஞ்சிருக்கு. இப்படி இருக்கும் போது என்ன பிரச்னை வரும்னு நீ நினைக்கிறே. அம்மாவிடம் சொல்லி விடேன், நம்மைப் பத்தி!"

“இதோ பாரு சிவா! நைஸா உன்னோட தகுதி, அந்தஸ்து, அழகு எல்லாத்தையும் உன் பேரைச் சொல்லாம சொல்லிப் பார்த்தேன். எங்க அம்மா, 'இதெல்லாம் தகுதியே இல்லை. ஏஐ செலக்ட் பண்ணி இருக்கா? அதனோட அப்ரூவல் இருக்கா?'ன்னு கேக்கறா. நான் பாட்டுக்கு உன்னைப் பத்தியும், நம்ம காதலைப் பத்தியும் சொல்லி ஒரேயடியா முடியாதுன்னு பதில் வந்தா அப்பறம் பேச்சையே எடுக்க முடியாது, அதான் யோசிக்கிறேன்."

“கரெக்ட்! முதல் தடவை ரிஜக்ஷன் ஆனா அத்தோட அவ்வளவு தான்! சரி, கவலைப் படாதே! என் ஃபிரண்ட் சரத் கிட்ட இதைப் பத்திப் பேசறேன்.” ஆறுதலாகச் சொல்லி விட்டுக் காரில் ஏறினான் சிவா.

கவலை படிந்த முகத்தோடு ஸ்கூட்டரில் ஏறிச் சென்றாள் தேவி.

“பூ! இவ்வளவு தானா சிஸ்டர்? இந்த முட்டாள் தான் உங்க ஹஸ்பெண்ட். இதுக்கு நான் காரண்டி” என்று தேவியைப் பார்த்து சிவாவின் நண்பன் சரத் அழுத்தம் திருத்தமாகச் சொன்னதை அவளால் நம்பவே முடியவில்லை.

“எப்படி அண்ணா, இவ்வளவு நிச்சயமா சொல்றீங்க?” என்றாள் தேவி.

“தேவி! சரத்தைப் பற்றி உனக்குத் தெரியாது. அவன் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ்லே ரொம்ப அட்வான்ஸ்ட் மாடலை வச்சிருக்கான்,” என்ற சிவா, சரத்தைப் பார்த்து, “டேய், உன் ஐடியாவைக் கொஞ்சம் விவரமாகச் சொல்லேன்” என்றான்.

ஒரு நிமிடத்திலே வரேன் என்று தனது ஆபீஸ் ரூமுக்குள் சென்ற அவன் திரும்பி வந்த போது கையில் சில பேப்பர்களைக் கொண்டு வந்தான்.

“தேவி! இதோ பேப்பர்கள்! இந்த லூஸை நிச்சயமாக கல்யாணம் பண்ணிக்கணும்னா இதை ஃபில் அப் செய்! அது போதும்” என்ற சரத் பேப்பர்களை தேவியிடம் நீட்டினான்.

தேவி அதைப் படித்துப் பார்த்து முகம் மலர்ந்தாள். சிரிக்கவும் செய்தாள்!

“எங்கே, பேப்பரைத் தா! இந்த அட்வான்ஸ்ட் ஏஐ இடியட் அப்படி என்ன தான் ஐடியா தந்திருக்கான்னு நானும் பாக்கறேன்!”

தேவியிடமிருந்து பேப்பர்களை வாங்கிப் படித்த சிவா "ஹாஹா!" என்று சிரித்தான்.

தேவியிடம், “அதான் நான் சொன்னேனே! சரத்தைப் போல ஒரு பெர்ஃபெக்ட் இடியட்டை இனி மேலே பார்க்கவே முடியாதுன்னு” என்று சொன்ன சிவா, “இதை உடனே ஃபில் அப் செய்” என்றான்.

தேவி விறுவிறு என்று எழுதலானாள்.

“இந்தாடி! இவன் தான் உனக்கு மாப்பிள்ளை” என்று அதிரடியாக தேவியின் அம்மா லலிதா சொன்ன போது அவள் அரண்டே போனாள். அவளது அப்பாவும் திகைப்புடன் தன் மனைவி காண்பிக்கும் போட்டோவைப் பார்க்க விரைந்தார்.

“அம்மா! நீ சொல்றதுக்கெல்லாம் ஆமாம் போடறது தான் என் ஒரே வேலை. ஆனால் இந்த விஷயத்திலே எனக்கும் முடிவெடுக்க உரிமை உண்டு” என்று கலக்கத்துடன் சொன்ன தேவி அப்பாவைப் பார்த்தாள்.

“ஐ ஃபுல்லி அக்ரீ வித் யூ. நீ தான் பைனலா முடிவைச் சொல்லணும்” என்று கூறிய தேவியின் அப்பா போட்டோவை வாங்கி தேவியிடம் கொடுத்தார்.

போட்டோவைப் பார்த்த தேவி பயங்கர ஆச்சரியத்திற்குள்ளானாள். அது சிவாவின் போட்டோவே தான்!இருந்தாலும் தன் ஆச்சரியத்தை அவள் உடனடியாக காட்டிக் கொள்ளவில்லை.

“யாராம், இவன்? இவனை எப்படி நீ செலக்ட் செய்தாய்?” என்று சற்று கடுப்புடன் கேட்டாள் தேவி.

“அடீ முட்டாள்! அடி முட்டாள்டி நீ!! இவன் பார்க்க அழகா இருக்கான். வயசு, ஜாதி எல்லாம் பொருத்தமா இருக்கு. கார் வச்சிருக்கான். சொந்த வீடு வேற! ஐடி கம்பெனியில் தான் வேலை. உன் கம்பெனி பேரே போட்டிருக்கு. விசாரித்துத் தான் பாரேன். இவன் தான் நம்ம வீட்டு மாப்பிள்ளை. ஏஐ-யே அப்ரூவ் பண்ணி செலக்ட் பண்ண பிறகு வேற பேச்சே இல்லை,” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்ன லலிதா, “நாளைக்கே பொண்ணு பார்க்க வரச் சொல்லி இருக்கேன். ரெடியா இரு” என்று தீர்க்கமாகச் சொல்லி விட்டாள்.

மறுநாள் பெண் பார்க்கும் வைபவம் நன்றாக நடந்து முடிந்தது. சிவா உடனடியாக சம்மதம் தெரிவிக்க அவனது பெற்றோர் முகூர்த்த தேதியைப் பற்றி லலிதாவிடம் பேச ஆரம்பித்தனர்.

லலிதாவிடம் எந்த வித ரீ ஆக்ஷனையும் காட்டாமல், “அம்மா பெண்ணாக” சரி என்று சொல்லி விட்டாள் தேவி.

“எப்படிடா இதை சாதிச்சே? “என்று சரத்திடம் சிவா கேட்டான்.

“அண்ணா! ஆயிரம் கோடி நன்றிகள்! எப்படி இதை ஃபிக்ஸ் பண்ணீங்க?” என்று ஆனந்தக் கண்ணீர் மல்கக் கேட்டாள் தேவி.

“அடி, அம்மாடி, அரை லூஸே! உன்கிட்ட கொடுத்த பேப்பரிலே உங்க அம்மாவுக்கு எதெல்லாம் பிடிக்கும் எதெல்லாம் பிடிக்காதுன்னு கேட்ட கேள்விக்கெல்லாம் நீ தானே பதில் கொடுத்தே! புடவை கலர், ஜரிகை பார்டர்னு எல்லாம் தான் அத்துபடி ஆயிடுச்சே. அதுக்கு தகுந்த மாதிரி தான் உங்க வீட்டையும் சிவா அம்மா, அப்பாவையும் நான் தயார் செய்தேன். உங்க அம்மா பார்க்கிற அதே சைட்டிலே தான் சிவாவின் ஜாதகம், டீடெய்ல்ஸை ரெஜிஸ்டர் செய்தேன். உடனே உங்க அம்மாவுக்கு அனுப்ப வச்சேன். முடிவை பார்த்தயா?” – சரத் கூறி முடித்தவுடன் அவன் கைகளைக் குலுக்கி நன்றி தெரிவித்து மகிழ்ந்தாள் தேவி.

இதையும் படியுங்கள்:
Strokkur Fountain: பூமிக்கு அடியில் ஆக்ரோஷமான வெந்நீர்! ஐஸ்லாந்தின் பீறிட்டு அடிக்கும் அதிசய நீர் ஊற்று!
AI Mappillai love story

“All the best” என்று கூறிய சரத், “ஒண்ணு புரிஞ்சுக்கணும். மனித மூளை தர டேட்டாவைத்தான் – தரவுகளைத்தான்- ஏஐ அனலைஸ் பண்ணும். எப்பவுமே மனித மூளை தான் ஒசத்தி. என் டேட்டாவைப் பார்த்து தான் அது முடிவு செஞ்சது. ஏஐ என்பது கோடிக்கணக்கான டேட்டாக்களை ஒரு நொடியில் அனலைஸ் செய்யும். அதிலே அது ஒசத்தி. மற்றதுலே...”

“சரத் தான் ஒசத்தி!” என்று முடித்தான் சிவா. மூவரும் மகிழ்ச்சியுடன் சிரித்தனர்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com