
அன்று அகழ்வாய்வு மையத்தில் வேலை மும்முறமாக நடந்து கொண்டிருந்தது. ஒரு பள்ளத்தில் பானை ஒன்று வெளிப்பட்டதால் மெதுவாக மண்ணைச்சுரண்டி உடையாமல் அதை வெளியே எடுக்க முயன்று கொண்டிருந்தார்கள்.
மற்றொரு பள்ளத்தில் அபூர்வ பொருள் ஒன்று வெளிப்பட, அதை சிதையாமல் மிகவும் கவனமாக தோண்டி எடுத்தார்கள். அது ஒரு அம்மிக்குழவிபோல் தோற்றமளித்தது. அன்று தோண்டப்பட்ட எல்லாக் குழிகளிலும் சில அபூர்வ பொருள்கள் கிடைத்தன.
மற்றொரு குழியில் பள்ளம் ஒன்று தோண்டப்பட்டு பாதியில் நின்றிருந்தது. அதில் கொஞ்சம் தண்ணீர் தேங்கியிருந்தது, குறிப்பாக ஏதும் கிடைக்க வில்லை என்று பாதியில் நிறுத்தி விட்டார்கள் போல் தோன்றுகிறது. அந்தப் பள்ளத்தின் பக்கத்தில் ஒரு மனிதன் உட்கார்ந்திருந்தான். தலை மொட்டையில்லாமல் சற்றே வளர்ந்த முடி. ஆடைகள், முகம் எல்லாம் அழுக்கடைந்து இருந்தன. ஏதோ முணுமுணுத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.