

அக்பரின் அரசவையில் சுவாரசியமான விவாதங்களுக்கு குறைவிருக்காது. ஒரு முறை அக்பர், 'ஒரு மனிதன் எதனால் மதிக்கப்படுகிறான்?' என்று ஒரு கேள்வியை எழுப்பினார். 'மனிதனுக்கு சமுதாயத்தில் கிடைக்கின்ற மதிப்பு, அவன் அணிந்திருக்கும் உடையால்' என்பது பீர்பாலின் வாதம். அவ்வாறு இல்லை என்று மறுத்தார் அக்பர்.
“நான் அரசராக மதிக்கப்படுவது என்னுடைய குணாதிசயங்களால்” என்று வாதிட்டார்.
“நீங்கள் அணிந்திருக்கும் அரசருக்கான உடை, சூழ்ந்திருக்கும் காவலர்கள், செல்வச் செழிப்பு ஆகியவற்றால் நீங்கள் அரசராக மதிக்கப்படுகிறீர்கள். உங்கள் குணாதிசயங்களால் அல்ல” என்றார் பீர்பால்.
அரசவையில் மற்ற மந்திரிகளும், பிரபுக்களும் அரசர் சொல்வதை ஆமோதித்தனர்
இதற்கான விடையைக் கண்டுபிடிக்க, அக்பரும் பீர்பாலும் மாறுவேடத்தில் நகரைச் சுற்றி வருவது என்று முடிவெடுத்தார்கள். கடைத் தெருவிற்குச் சென்ற போது, கடைக்காரர்கள் தன்னை அடையாளம் கண்டு பிடித்து விட்டதாகவும், அவர்களுக்கு வந்திருப்பது அரசர் என்று தெரிந்து விட்டது என்றும் சொன்னார் அக்பர்.
"இல்லை, அது விற்பவன், வாங்க வருபவனுக்கு அளிக்கும் நட்பு கலந்த பார்வை. அது அவர்களின் வியாபார தந்திரம். அவர்கள் அரசர் வந்திருப்பதாக நினைக்கவில்லை" என்று வாதிட்டார் பீர்பால்.
வழியில் ஒரு சத்திரத்தில் கல்யாணம் நடந்து கொண்டிருந்தது. கல்யாணத்திற்குச் சென்று விருந்து சாப்பிடலாம் என்றார் பீர்பால். “நமக்கு அழைப்பு இல்லையே, எப்படி செல்வது” என்றார் அக்பர்.
“ஏன் உங்களைப் பார்த்தவுடன் அரசர் வந்திருக்கிறார் என்று மகிழ்ச்சியுடன் நமக்கு உபசாரம் செய்வார்கள். ஆகவே சென்று பார்ப்போம்” என்றார் பீர்பால்.
“ஆமாம், நம்முடைய நாட்டு மக்கள், நான் ராஜ அலங்காரத்துடன் இல்லாவிட்டாலும், அடையாளம் கண்டு கொண்டு மரியாதை செலுத்துவார்கள்” என்றார் அக்பர்.
அக்பரும், பீர்பாலும் கல்யாண சத்திரத்தை அடைந்தனர். உள்ளே நுழைய முயற்சிக்கும் போது வாசலில் இருந்தவர், “நீங்கள் யார்? இது எங்கள் குடும்பத்தினரின் கல்யாணம். ஆகவே, மற்றவர்கள் வருவதற்கு அனுமதியில்லை” என்றான்.
அக்பர் பேச முயற்சித்த போது கூட பேச விடவில்லை. "இங்கிருந்து போய் விடுங்கள்" என்று விரட்டி விட்டார்.
அக்பர் இதை எதிர்பார்க்கவில்லை. “அந்த மனிதனுக்கு, நான் யார் என்று தெரியவில்லையா” என்று வியந்தார்.
“நாம் மேற்கொண்ட பரிசோதனையில் ஒரு பகுதி தான் முடிந்திருக்கிறது மகாராஜா. நாம் அரசவையில் இருக்கும் போது அணியும் உடையணிந்து மறுபடியும் வருவோம். அப்போது நமக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்” என்றார் பீர்பால்.
சொன்னது போலவே, அக்பர், பீர்பால் இருவரும் அவர்கள் அரசவையில் அமரும் போது அணியும் உடையணிந்து, திருமண மண்டபத்திற்குச் சென்றனர்.
வரவேற்பு தடபுடலாக இருந்தது. அரசர் வந்திருக்கிறார் என்று மரியாதையுடன் வரவேற்று, விருந்திற்கு அழகிய இருக்கைகளும் அமைத்தார்கள்.
“பார்த்தாயா, பீர்பால், கேள்வி எதுவும் கேட்காமல், உபசாரத்துடன் நம்மை உள்ளே அழைத்துச் சென்றார்கள்” என்று வியந்தார் அக்பர்.
உணவு உண்ண அமர்ந்ததும், பீர்பால், உணவில் சிறிது எடுத்து தனது உடைக்கு வைத்தார்.
“என்ன செய்கிறாய், பீர்பால்” என்றார் அக்பர். “இங்கு உண்மையான விருந்தாளி உடை அல்லவா? அந்த விருந்தாளிக்கு உணவு அளிக்கிறேன். நமக்கு மதிப்பளித்து விருந்தில் அமர வைத்திருப்பது நாம் அணிந்திருக்கும் உடை தானே?” என்றார் பீர்பால்.
“வழக்கம் போல, நீ சொன்னது சரி என்று நிரூபித்து விட்டாய். மனிதனுக்கு மதிப்பை அளிப்பது அவன் அணிந்திருக்கும் ஆடை என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்” என்றார் அக்பர்.