

நான் துவக்க பள்ளியில் படிக்கும்போது சந்தித்த ஒரு விசித்திரமான மனிதர் அணுகுண்டைய்யா. எப்படி இப்படி ஒரு பெயர் அவருக்கு அமைந்தது என்று என்னால் யூகிக்க முடியவில்லை. எந்த பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு இப்படி ஒரு பெயரை வைக்க விரும்பி இருக்க மாட்டார்கள். இவர் தினமும் காலை ஒன்பது மணிக்கு நான் படித்த ஆரம்பப்பள்ளி முன் தோன்றுவார். யாருக்கும் இடைஞ்சல் இல்லாமல் தெரு ஓரத்தில் நின்றவாறு பள்ளிக்கு தங்கள் அன்னையரோடு வரும் குழந்தைகளை ஒரு வித பாசத்தோடு பார்ப்பார். அவரது தோற்றம் விசித்திரமாக இருக்கும். கண்கள் ஒன்றரை... பானை போன்ற தொப்பை. அவர் அணிந்து வரும் சட்டையை பார்க்க வேண்டுமே.. பல வண்ண துணி துண்டுகளை சேர்த்து தைத்தது போல ஒரு வானவில் சட்டை அது.
அந்த காலத்தில் தையல் காரர்கள் வாங்க முடியாதவர்களுக்கு ஆங்காங்கே மீந்து போன துணிகளை இணைத்து சட்டைகள் செய்து மலிவு விலையில் கொடுப்பார்கள். அணுகுண்டைய்யாவின் கைகள் வெள்ளை முடியுடன் கூடிய யானை துதிக்கை போல இருக்கும்... தன் காலருக்கு பின்னே ஒரு கலர் கர்சீப்பை மடித்து வைத்திருப்பார்.
அவர் அணிந்திருக்கும் கை கடிகாரம் போல பார்க்க முடியாது வேறு எங்கும். கண்ணாடி முழுதும் கீறல்கள் தான். எப்படி அதில் மணி பார்க்கிறாரோ ஆண்டவனுக்கு தான் வெளிச்சம். தன் பாண்ட் பாக்கெட்டில் எப்போதும் கொஞ்சம் சாக்லேட் மிட்டாய்கள் வைத்திருப்பார்.. அவற்றை குழந்தைகளுக்கு கொடுப்பார். அவரிடமிருந்து வரும் பாசிட்டிவ் அதிர்வு குழந்தைகளை மிகவும் கவர்ந்து விட்டதால் அவருக்கு கைகள் அசைத்தபடி தான் பள்ளிக்கு உள்ளே செல்வார்கள்.. ஆசிரியரான என் தந்தை அணுகுண்டைய்யாவை பற்றி விசாரித்து சில தகவல்களை சொன்னார்.
அணுகுண்டைய்யா சிறிய சண்டை காட்சிகளில் வரும் நடிகர் அதாவது ஸ்டண்ட் மேன். பூர்வீகம் ஆந்திர மாநிலம். குடும்பம் ஒன்றும் இல்லை. கோடம்பாக்கத்தில் தங்கியிருப்பவர். NTR மற்றும் MGR போன்ற பெரிய ஹீரோக்களிடம் போலி மற்றும் நிஜ குத்துக்கள் வாங்கினவர்.
இப்படியிருக்கையில், நான் கிரிபித் சாலை பள்ளியைவிட்டு வேறு பள்ளிக்கு மாறி போனேன். அங்கு போனபின்பு அணுகுண்டையாவை மட்டும் எனக்கு பார்க்க வேண்டும் போல தோன்றும்.
ஒரு நாள் காலை அவரை பார்த்தேயாகவேண்டும் என்று கிரிபித் சாலைக்கு சென்ற போது, எனக்கு ஏமாற்றம் தான் காத்திருந்தது. அணுகுண்டைய்யா வரவில்லை. பக்கத்திலிருந்த கடையில் விசாரித்தபோது அவர் சொன்னார். "அணுகுண்டைய்யாவா, அவர் இறந்து இரண்டு மாதங்களுக்கு மேல் ஆயிடுத்தே!"
"என்ன ஆச்சு அவருக்கு" என்று நான் அதிர்ந்து போய் கேட்க, கடைக்காரர் சொன்னார், "மாம்பலம் ரயில்வே கேட்டில் ரயில் மோதி இறந்து விட்டார் பாவம்."
இந்த செய்தி கேட்டவுடன் எனக்கு Griffith சாலை 'GRIEF'FITH சாலையாக மாறிவிட்டது.