

மினி கதை - 1: மன்மதன் வந்தானா… ?
ஆச்சு… கல்யாணமாகி மூன்றாண்டுகளுக்கும் மேலாச்சு!. சரளா சமையல் கலையில் நளபாகமோ பீமபாகமோ தெரியாதவள் என்பதைத் தெரிந்து கொண்டான் நம்பி.
ஒருநாள் இரண்டு நாள் அல்ல..! வாரா வாரம் புதிதாய் சமையலில் எதாவது செய்துதான் கொடுத்து அனுப்புவாள் சரளா!. ஆனால் என்ன அதைப் பத்து பேரோடு ஒன்றாய்ச் சேர்ந்து உட்கார்ந்து தான் உண்ண முடியாது!
மாலை வீடு திரும்பினால், ஆர்வமாய் எப்படி இருந்தது என்று கேட்கத் தவறமாட்டாள். நம்பி, நம்பிக்கையை குலைக்காமல், ‘ஓ நல்லா இருந்தததே!’ என்று சொல்லி மழுப்பி விடுவான்.
ஒருநாள் அலுவலகப் பியூன் பரமசிவம்தான் விஷயத்தைப் போட்டு உடைத்து விபரீதமாக்கி விட்டான். "அம்மா! அய்யா எப்பவுமே தனியாக உட்கார்ந்துதான் சாப்பிடுவார்.
ஏன்னு யாரும் கேட்கமாட்டாங்க! ஒருநாள் நான், அவர் ‘ஸ்பாட் விசிட்டுக்குப்’ போயிருந்தபோது சாப்பாடு வீணாயிடக் கூடாதேன்னு அவருக்கே தெரியாம சாப்பிட்டேன்! சே! பாவம்மா சாரு! உங்க சமையல் நல்லா இருக்காதுன்னு சொல்லக்கூடாதுன்னுதான் தனியாச் சாப்பிடறாரு போல!" என்று உண்மையை உடைக்க. அன்றைக்கு அழுதபடி அவனை சரளா கேட்டாள்.
"ஏங்க சாப்பாடு நல்லா இல்லைனு எனக்குச் சொல்லக் கூடாதா?! நான் ஒற்றைப் பிள்ளையா வளர்ந்தவள்! எனக்கு சமையல் தெரியாதுதான் ‘யூ டியூப்’ பார்த்து சமைத்தால், ஒரே உணவை ஒன்பது பேர் ஒன்பது மாதிரி செய்யச் சொல்றாங்க! ஒண்ணாக் கலந்து செஞ்சா உருப்படியா ஒண்ணு கூட வரமாட்டேங்க்குது! உங்களுக்குக் குடுத்துட்டு அதைத்தானே நானும் சாப்பிடறேன். என்னாலயே வாயில வைக்க முடியலை!.. நல்லாவே வரமாட்டேங்க்குது வெரி சாரி…!!!" என்று கண்ணைக் கசக்க, நம்பி நெகிழ்ந்து போய்ச் சொன்னான்.
"சரளா அட, சீ! அசடே.. ஒண்ணு புரிஞ்ச்சுக்கோ…'affection is always greater than perfection!’ உன் மனசு எனக்குத் தெரியும் சரளா! உணவா முக்கியம் உன் உண்மை உள்ளம்தானே?!" என்று கேட்க. சிந்தும் விழிகளோடு அவன் மார்பில் சினேகமாய்ச் சாய்ந்து பாசம் காட்டினாள் பதிலாக!
மினி கதை - 2: ‘நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே…!’
எத்தனை சொல்லியும், என்ன கெஞ்சிக் கேட்டும் தெருவிளக்குப் போட மறுத்தது அந்த கிராம நிர்வாகம். ‘லைட்’ ஸ்டாக்கில்லை என்பது அவர்கள் வாதம்!. அடிப்படைக் காரணம் வேறொன்று உண்டு! எதிரிலிருக்கும் ஒரு அப்பார்ட்மெண்ட் பணக்காரர்கள் பலரிருக்கும் பவனம் என்பதால் அவர்களே செலவு செய்து போட்டுக் கொள்ளட்டுமே?! என்பது அவர்கள் திட்டம்!.
அபார்ட்மெண்ட் பிரகஸ்பதிகளோ ‘எவன் எலக்ட்ரிக் சார்ஜ் தண்டம் அழுவது?!’ என்ற கஞ்சத்தனத்தால் நீயா நானா போட்டியில் தெருவிளக்கில்லாமல் இருண்டு கிடந்தது தெருவும், அபார்ட்மெண்டும்!
‘என்ன செய்வது யோசித்தான் ‘வாட்ச் மேன்’ வஸந்த்!. அபார்ட் மெண்ட் செகரெட்டரியிடம் "சார், நேத்து ராத்திரி ஒரு கரு நாகப் பாம்பு பார்த்தேன்.!. நாம் வண்டி நிறுத்தியிருக்கும் இடத்தில் பதுங்கி இருந்தது. அது எதாவது வண்டிக்குள் காருக்குள் புகுந்துவிட்டால் ஆபத்துதானே?!" அடித்துவிட்டான் ஒரு பொய்யை…!
ஒரே வாரத்தில் மெர்க்குரி லைட் மிளிர ஒளிர்ந்தது அபார்ட்மெண்ட்.
'நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே உனக்கு நல்ல பெயர் வைத்தவர் யார் சொல்லு பாம்பேன்னு' பாடின காலம் போய், நாகப்பாம்புக்கு நல்ல பாம்பு என்று நாமகர்ணம் சூட்டக் காரணம் வஸந்தான் என்பது வசதியான அபார்ட்மெண்ட் வாசிக்களின் புத்திக்கு வசப்படவில்லை பாவம்!.
நாகப்பாம்பு லைட் எரிய வைத்து எல்லாருக்கும் வெளிச்சம் தந்ததால் நல்ல பாம்பானது!
மினி கதை - 3: ‘நானாக நானில்லை'!
போன் பண்ணி, "நான் அழகுதாசன் பேசறேன். எனக்கு மெடிக்கல் செக்கப் பண்ணணும். பிளட் சுகர், அப்டமல் ஸ்கேன் எல்லாம் பண்ணணும். வாட்ஸாப்பில் டாக்டர் எழுதிக் கொடுத்த ஸ்லிப்பை அனுப்பி வைக்கிறேன். எப்ப வரலாம்?! எவ்வளவு சர்ஜாகும்னு சொன்னாத் தேவலை!" என்றான் அழகுதாசன்.
அந்தப் பக்கம் குயிலினும் இனிய குரல், "உங்களுக்கு என்ன வயசாகுது?!" என்றது.
ஏன் அப்படிக் கேட்டதுன்னு தெரியவில்லை!
'பளிச்சின்னு ஒரு மின்னல் வெட்டு!’ எல்லாரையும் குயில் இப்படிக் கேட்குமா? இல்லைத் தன்னைத்தான் கேட்குதா?!’ ஒரு நப்பாசை! ஆக்சுவல் வயசைச் சொல்ல மனசு வரலை!
"சொல்லுங்க சார்!" என்ற குயிலின் குரல் உசுப்ப, சிலிர்த்தது காமப் பிசாசு!.
"வயசெல்லாம் எதுக்கு?! ரேட்டைச் சொல்லுங்க?!" அவன் காரியத்தில் குறியாய் இருப்பதைக் குயில் உணர்ந்திருக்க வேண்டும் .
"ஒரு ஐயாயிரமாகும்!" என்றதும் அழகுதாசன் அம்பேலானான். ஐயாயிரத்தைக் குறைக்கும் அஸ்திரம் ஆயுசுதானே?! "நான் ஒரு சீனியர் சிட்டிசன் ரிடையர்டு பெர்ஷனர். சார்ஜஸ் ஜாஸ்தியா இருக்கே?"
குயில் தொடர்ந்தது. "எல்லாருக்கும் ஒரே சார்ஜஸ்தான். எப்ப வர்றீங்க? ‘பிளட் டெஸ்ட்’ பாஸ்டிங்கில் என்றால், ஏழுமணிக்கே வந்துடுங்க! லேப் ஆறரைக்கெல்லாம் திறந்திடும். பர்ஸ்ட் ஆளா எடுத்துக்கலாம். பேரை ரெஜிஸ்டர் பண்ணிக்கவா?!" அதே குயில்.
"வேற வழி…???!"
"நாளைக்குக் காலைல வர்றேன். நோட் பண்ணிக்குங்க! உங்க பேர்??" என்றதும், நித்யா என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டாள்.
இவன் எதுக்கு அவள் பெயரைக் கேட்கணும்???!!!
வைத்ததும் "அவ வயசைக் கேட்கலையே?!" மனசு அல்லாடியது. இந்த ஒரு விஷயத்தில் ஆரம்பத்திலிருந்தே 'நானாக நானில்லை தாயே…..!’
அடுத்த நாள் டெஸ்ட்டுக்குப் போக, நித்யா இல்லை! அந்த இடத்தில் வேறு ஒருத்தி வித்யான்னு வச்சுக்கவுமே!!!
கோழி குருடா இருந்தா என்ன??!!! கொழம்பு ருசியா இருந்தாச் சரிதானே??!
டெஸ்ட்டுக்குக் குடுத்து பில் பே பண்ணுகையில் சார்ஜஸ் எட்டாயிரம் பில்லிடப்பட்டது! கோழி குருடு என்பதாலோ?
தூக்கி வாரிப்போட்டது அழகுதாசனுக்கு!
"ஐயாயிரத்துக்குள்ள வரும்னாங்களே?"
"யார் சொன்னது?"
"நித்யான்னு சொன்னாங்க."
"இப்ப அவங்க இங்க வேலைல இல்லை! ‘ அவங்க, உங்களுக்குத் தெரிஞ்சவங்களா?"
"இல்லை.. சும்மா பழக்கம்தான்."
"அவங்களை நிறுத்தீட்டாங்க!"
"யார்???"
'மேடம் சுப்பீரியர்!"
"ஏன்?????"
"அவங்க சரியில்லைனுதான்!!"
"ஓஹோ!" ஒற்றை வார்த்தையோடு நிறுத்திக் கொள்ள நெஞ்சு சொன்னது…!
யார்தான் இந்த உலகத்தில் சுப்பீரியர்??? யாரும் உலகில் சுப்பீரியர் இல்லை! வயதைத் தேவையின்றிக் கேட்டது நித்யா தப்பு என்றால், உண்மை வயதை ஒளித்த அழகுதாசன் மட்டும் யோக்கியமா? அவள் பெயரை இவன் கேட்டதுதான் நியாயமா???!! ஆக உலகில் சுப்பீரியருமில்லை! இன்பீரியருமில்லை!. அவரவர்கள்… அவரவர்களாகவே அவனியில் உலா வருகிறார்கள்.
அகப்படாத வரை எல்லாரும் நல்லவரே,…!!!
அவரவர்கள் அவரவர்களாக இருப்பதே நிதர்சனம்! நிஜம்!