
கையில் இனிப்புப் பெட்டியுடன் சிவராமன் வீட்டில் நுழைந்தார் பக்கத்து வீட்டில் வசிக்கும் திவாகர். “சிவராமன் சார், இன்றைக்கு எனக்குப் பிறந்த நாள். உங்கள் ஆசீர்வாதம் வேண்டும். இனிப்பு எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார் திவாகர். பிறந்த நாள் வாழ்த்துச் சொல்லி, இனிப்பு எடுத்துக் கொண்ட சிவராமன், “இன்று உங்கள் பிறந்த நாள், ஆங்கில வருடப் பிறந்த தேதியா அல்லது நட்சத்திரப் பிறந்த நாளா” என்று கேட்டார்.
“இது ஒரு ஆச்சரியமான விஷயம் சார். இன்று இரண்டு பிறந்த நாட்கள். ஆங்கில பிறந்த தேதி மற்றும் நட்சத்திரப் பிறந்த நாள். இதுவரை, இரண்டும் ஒரே நாளில் வந்ததில்லை” என்றார் திவாகர்.
“அப்படியென்றால், உங்கள் வயது 57 என்று சொல்லுங்கள். இன்னும் மூன்று வருடத்தில் மணி விழா கொண்டாடப் போகிறீர்கள்” என்றார் சிவராமன்.
“எப்படி சார், என்னுடைய வயதை சரியாகச் சொன்னீர்கள். ஆச்சரியமாக இருக்கிறதே” என்று கேட்டார் திவாகர்.
“இரண்டு பிறந்த நாளும், ஒரே நாளில் வந்தால், அவருடைய வயது 19இன் பெருக்குத் தொகையாக இருக்கும். அதாவது, வயது 19, 38, 57, 76 என்று இருக்கலாம். உங்களுக்கு 38 வயதுக்கு மேல் இருக்கும். நிச்சயமாக 76 வயது முதியவர் இல்லை. ஆகவே, உங்கள் வயது 57 என்று சொன்னேன்.”
“ஆனால், அது என்ன 19இன் பெருக்குத் தொகை. ஏன் 19 என்று சொல்லுங்கள்” என்று கேட்டார் திவாகர்.
“19 என்பது 19 வருடங்கள். வருடத்திற்கு 365 நாட்கள். அதுவே லீப் வருடமாக இருந்தால் 366. மொத்தம் 27 நட்சத்திரங்கள். 19 வருடங்களில், 15 சாதாரண வருடம், 4 லீப் வருடம். ஆக, மொத்த நாட்கள் 6939. இது 27 ஆல் மிச்சமில்லாமல் வகுபடும். ஆகையால், ஒரு மனிதனின் வயது 19இன் பெருக்குத் தொகையாக இருக்கும் போது, இரண்டு பிறந்த நாளும் ஒரே நாளில் வருகிறது.” என்று முடித்தார் சிவராமன்.
“ரொம்ப நன்றி, சிவராமன் சார். இந்த செய்தி எனக்கு நல்ல பிறந்த நாள் பரிசு” என்றார் திவாகர்.