சிறுகதை: குமாஸ்தாவின் குழப்பம்!

Tamil Short Story  Gumasthavin Kulappam
Man searching File
Published on

மின் விசிறி தலைக்குமேலே சுழன்றுகொண்டிருந்த போதிலும் வியர்த்து விறுவிறுத்துப் போயிருந்தேன். எங்கு தேடினும் அந்தக் கோப்பை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனடியாக அந்தக் கோப்பை எடுத்துக்கொண்டு வரச்சொல்லி மாவட்ட வருவாய் அதிகாரி (டி.ஆர்.ஓ) தொலைபேசியில் கேட்டிருக்கிறார்.

அவரது அலுவலகம் மாடியில் இருக்கிறது. எங்களது அலுவலகம் தரைத் தளத்தில் இருக்கிறது. அந்த மாவட்ட உணவுப் பொருள் வழங்கும் அலுவலகத்தில் நான் குமாஸ்தாவாகப் பணிபுரிகிறேன். மாவட்ட ஆட்சியரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் அலுவலம் அது. கோப்பினைக் கேட்டுள்ள மாவட்ட வருவாய் அதிகாரியோ மாவட்ட ஆட்சியருக்கு அடுத்த நிலையில் உள்ளவர். அவர் கோப்பைக் கேட்கிறார் என்றால் அதில் ஏதோ பிரச்சினை இருக்கிறது என்றுதான் அர்த்தம். அப்படி ஏதாவது பிரச்னை இருக்குமென்றால் என் தலைதான் முதலில் உருளும்.

அரசாங்கத்தால் அத்தியாவசியப் பொருட்கள் என்று அறிவிக்கப் பட்டுள்ள பொருட்களில் ஒன்றானது மண்ணெண்ணெய். ரேஷன் கடைகள் மூலம் அது விநியோகம் செய்யப்படுகிறது. அரசால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கீடு செய்யப்படும் மண்ணெண்ணெய்யை தாலுகாக்களுக்கு மறுஒதுகக்கீடு செய்யும் பணி எனது இருக்கையிலிருந்து செய்யப்படுகிறது. அதில் தவறு ஏதும் ஏற்பட்டால் முக்கால்வாசிப் பொறுப்பை நான்தான் ஏற்க வேண்டி இருக்கும். எனவேதான் எனக்கு இவ்வளவு பதற்றம்!

அந்தக்காலத்து மரபீரோவை முழுமையாகத் தேடிவிட்டேன். அதில் அந்தக் கோப்பு இல்லை. என் இருக்கைக்கு அருகில் ஒரு மரப்பெட்டி கிடக்கிறது. அது முழுக்கப் பதிவேடுகள் மட்டுமே இருக்கின்றன. அந்த மரப்பெட்டி என்னைப் பார்க்க வருபவர்கள் உட்கார்வதற்கான இருக்கையாகவும் பயன்படக் கூடியது. அதிலேயும் தேடிப் பார்த்துவிட்டேன். அதிலும் இல்லை. மிச்சமிருப்பது இந்த இரும்பு பீரோ மட்டும்தான். நடப்புக் கோப்புகள் அனைத்தும் இதில்தான் வைக்கப் பட்டிருக்கும். அதைத் திரும்பத் திரும்ப மூன்றுமுறை தேடிவிட்டேன், காணவில்லை.

எனது அலைபேசி அலறிட அதை எடுத்த நான், “இன்னுங் கொஞ்ச நேரத்தில வந்துடுவேன், மிதிலா! நீயும் கொழந்தைகளும் ரெடியா இருங்க” எனச் சொல்லி அலைபேசியை முறித்தேன். கால் மணி நேரத்திற்குப் பின்பு மீண்டும் அலைபெசியில் அழைப்பு! மிதிலாதான்!

“என்னபெரிய வேல பாக்குறீங்க! ஒரு ஃபங்ஷன் அன்னைக்குக் கூட நேரத்தோட வீட்டுக்கு வரமுடியாதா!” என்றாள் மிதிலா. அவளது உறவுக்காரர் வீட்டுத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி! அந்த விசேஷத்திற்குப் போக வேண்டுமென்று மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறாள். இதில் பிரச்சினை என்னவென்றால், அவளது உறவுக்காரர் வீட்டு விசேஷம் என்பதால் நான் வேண்டுமென்றே விசேஷத்திற்குப் போவதைத் தவிர்க்க அலுவலகத்தில் வேலை இருக்கிறது என்று பொய் சொல்வதாக அவள் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடும். அப்படி நடந்துவிட்டால் கொஞ்ச நாட்களுக்கு வீடே நரகம்தான்! 

“மிதிலா, தயவுசெய்து புரிஞ்சுக்க! இங்க நெலம சரியில்ல. ஒரு ஃபைலக் காணாம்னு தேடிக்கிட்டிருக்கேன். கெடச்ச ஒடனே ஓடியாந்திருவேன்” எனச் சொல்லி அலைபேசியைத் துண்டித்தேன்.

மணி ஏழு நாற்பது ஆகிவிட்டது. இந்நேரம் நான் குடும்பத்துடன்  திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்க வேண்டும். அதற்காக மாலை சரியாக ஐந்தே முக்கால் மணிக்கெல்லாம் நான் வீட்டிற்குப் புறப்படத் தயாராக இருந்தேன். அந்நேரம்தான் மேல் மாடியிலிருந்து கோப்பினைக் கேட்டுத் தொலைபேசி வந்து தொலைத்தது. கோப்பினை எடுத்து எங்களது அலுவலகக் கண்காணிப்பாளரிடம் கொடுத்துவிட்டாலே என் கடமை முடிந்தது என்று தொடக்கத்தில் சாதாரணமாக நினைத்துவிட்டேன். இப்படி ஆகுமென்று நான் கனவுகூடக் காணவில்லை. மீண்டும் அலைபேசி ஓலமிட்டது.

“ஹலோ! வரமுடியுமா முடியாதா” என்று அதட்டினாள் மிதிலா. இரண்டு மூன்றுமுறை மூச்சை நன்றாக இழுத்து விட்டுக்கொண்டு, மனதை நிதானமாக்கிப் பதிலுரைத்தேன், “இங்க பாரு மிதிலா, நான் ரொம்ப இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறேன். ஒரு முக்கியமான ஃபைலக் காணோம். அப்படியே அது காணாமல் போய்விட்டால் அது பெரிய பிரச்னையாகிப் போகும். அது கெடச்சாக்கூட அதில் அதிகாரிகள் தவறு எதையும் கண்டு பிடிச்சுட்டாங்கன்னா இன்னும் பெரிய பிரச்னையாகிடும். நீ தயவுசெஞ்சு ஒரு ஆட்டோவப் பிடுச்சு பிள்ளைகளக் கூட்டிகிட்டு ரிசப்ஷனுக்குப் போயிடு. நான் என் வேலைமுடிஞ்சதும் நேரா அங்க வந்துர்றேன்.” என்றேன்.

“எங்க வீட்டு விசேஷம்ன்னா நீங்க இப்படித்தான் பேசுவீங்க. நீங்க ஒன்னும் விசேஷத்துக்கு வந்து கிழிக்க வேணாம். நானே போயிக்கிறேன். ஓம் புருஷன் எங்கன்னு எல்லாரும் கேப்பாக. அதுக்குத்தான் என்ன பதில் சொல்றதுன்னு தெரியல” எனச் சொல்லி கோபத்துடன் அலைபேசியின் மூச்சை அடக்கினாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: காதல் பூ!
Tamil Short Story  Gumasthavin Kulappam

எங்களது அலுவலக அதிகாரியின் ஜீப் முகாம் சென்றுவிட்டு அலுவத்தின் முன்பு வந்து நின்றது. அதிகாரி அவரது அறைக்குச் சென்றபின்பு அவருடன் முகாம் சென்றுவந்த அலுவலக உதவியாளர் பிச்சை என்னிடம் வந்து ஒரு கோப்பை நீட்டி,

“கெரோசின் அலாட்மெண்ட் ஃபைல். அய்யா கேட்டார்னு நீங்க இல்லாத நேரத்தில நான்தான் எடுத்துட்டுப் போனேன்.” என்றார்.

பாதி உயிர் திரும்பி வந்துவிட்டது எனக்கு. மீதி உயிர் இருக்கிறதே! உடனடியாக அந்தக் கோப்பைக் கண்காணிப்பாளரிடம் கொடுத்தேன். அதை வாங்கிக்கொண்டு அவர் ஓட்டமும் நடையுமாக மாடிக்குச் சென்றார். போகும் பொழுது, “ரமேஷ், நான் வர வரை ஆபீசிலயே இருங்க” என்று சொல்லிவிட்டுத்தான் போனார். எனக்குக் கைகாலெல்லாம் உதற ஆரம்பித்துவிட்டது. 

“ஆண்டவனே! ஃபைலில் எந்தத் தவறும் இருந்துவிடக் கூடாது. நீ தான் என்னைக் காப்பாத்தணும்” என்று வேண்டிக்கொண்டேன். ஏதாவது தவறு இருந்து; அதனால என்மீது நடவடிக்கை எடுத்தால் அவ்வளவுதான் இவ்வாண்டு எனக்குக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு அம்போ தான். என் மனம் இப்படி எதை எதையோ நினைத்துக் குழம்பிக் கொண்டிருந்தது.

அரை மணி நேரம் கழித்து கண்காணிப்பாளர் தளர்ந்த நடையுடன் அலுவலகம் வந்து சேர்ந்தார். அவரைப் பார்த்ததும் எழுந்து நின்றேன். கையைக் காட்டி என்னை அமரச் செய்துவிட்டு எங்களது அலுவல அதிகாரியின் அறைக்குள் சென்றுவிட்டார். எனக்குத் தலைசுற்றி மயக்கம் வந்தது. ஏதோ பெரிதாக மாட்டிக்கொண்டு விட்டோம் என்பது உறுதியாகிவிட்டது. அறைக்குள் சென்றவர் திரும்பிவர மேலும் அரைமணி நேரம் ஆனது. நான் உடலாலும் மனதாலும் துவண்டு போய்விட்டேன். திரும்பி வந்த கண்காணிப்பாளர் என்னை ஏறெடுத்தும் பார்க்காமல் அவரது இருக்கையில் சென்று அமர்ந்துவிட்டார். என்னிடம் சொல்லிக்கொள்ள அவரிடம் எதுவும் இல்லை போலும். அவரது கைவசம்தான் ஆவணங்கள் இருக்கின்றனவே! மாவட்ட வருவாய் அதிகாரியின் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கலாமே! அது தொடர்பாகத்தான் அலுவலக அதிகாரியும் கண்காணிப்பாளரும் அரைமணி நேரம் விவாதித்திருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டேன்.

தயங்கித் தயங்கி கண்காணிப்பாளரின் இருக்கை அருகில் சென்று நின்றேன்.

“சார், என்ன சார் ஆச்சு” என்று செருமிக்கொண்டே கேட்டேன். அவர் நேராக என் கண்ணைப் பார்த்து நமட்டுச் சிரிப்புச் சிரித்தார்.

“சார், சொல்லுங்க சார்” என்றேன் கெஞ்சும் தொனியில்.

“ஒன்னுமில்ல ரமேஷ், நீங்க வீட்டுக்குக் கெளம்புங்க” என்றார். 

உயிரே போய்விடும்போல் இருந்தது எனக்கு. அழுகாத குறையாகக் கேட்டேன் “தயவுசெஞ்சு சொல்லுங்க சார்” என்று.

சற்று யோசித்தவர்,

“டி.ஆர்.ஓ. மகள் திருமணப் பத்திரிக்கை உங்களுக்குக் கெடச்சிருச்சா?” என்றார். ஏதோ சம்பந்தமில்லாமல் அவர் பேசுகிறார் என்று நினைத்தேன். இருந்தாலும் நம் பங்கிற்கு ஏதாவது சொல்ல வேண்டுமே!,

இதையும் படியுங்கள்:
சிறுகதை - பிழைத்துப் போகட்டும்!
Tamil Short Story  Gumasthavin Kulappam

“செய்முறை எதுவும் செய்யணுமா, சார்? “ எனக் கேட்டேன் அப்பாவியாக.

பெரிய சிரிப்பாகச் சிரித்த அவர் ஒரு துண்டுச் சீட்டை எடுத்து நீட்டினார். அதில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டிருந்தது:

பொன்னி அரிசி - 100 கிலோ

பாஸ்மதி அரிசி - 25 கிலோ

சீனி - 50 கிலோ

துவரம் பருப்பு - 25 கிலோ

பாசிப் பரும்பு - 20 கிலோ

ரிஃபைன்டு ஆயில் - 20 லிட்டர்

கடலை எண்ணெய் - 10 லிட்டர்

“நம்ம ஆபீஸிலிருந்து இவ்வளவு செய்யச் சொல்லி இருக்குறாரு டி.ஆ.ஓ. நீங்க வேற தனியாச் செய்யணுமா! வீட்ல போயி ரெஸ்ட் எடுங்க ரமேஷ்! இந்தாங்க உங்க ஃபைல். அதத் தொட்டுக்கூட பாக்கல டி.ஆ.ஓ” என்றார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com