
கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்கம் சார்பில் சுமார் 50 பேர் அடங்கிய குழு ஒன்று நம் ஆதித்தமிழின் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்வதற்காக வரலாற்று நடைபயணம் மேற்கொண்டது. அதில் நானும் ஒருவள்.
சிவகங்கை... ஆதித்தமிழனின் தடங்கள் ஆழமாய் பதிந்த இடங்களுள் ஒன்று. அங்குள்ள ஆன்மீக தலங்கள் மற்றும் தொல்லியல் தடங்கள் அத்தனையும் கண்டோம். காளையார் கோவில், அரண்மனை சிறுவயல், திருமலை, திருக்கோஷ்டியூர், இளையாத்தங்குடி, இரணியூர் ஆகிய ஊர்களின் கோவில்களையும் அவற்றின் வரலாற்றுச் சிறப்புகளையும் கண்டோம். சிவகங்கை திருமலையில் 4000 ஆண்டு பழமையான பறவை முகம் கொண்ட கோட்டு ஓவியங்கள் உள்ளிட்ட பாறை ஓவியங்கள், 2000 ஆண்டு பழமையான சமணப் படுகைகள், தமிழி கல்வெட்டுகள், 8 ஆம் நூற்றாண்டு பாண்டியர் குடைவரைக் கோவில், 13 ஆம் நூற்றாண்டு கற்றளி, மலைக் கொழுந்தீஸ்வரர், பாகம் பிரியாள் கோவில், மகிஷாசுரமர்த்தினி முக்குறுனி விநாயகர் என நம் முப்பாட்டன் கலை ரசித்தோம். 13ஆம் நூற்றாண்டு குலசேகர பாண்டியன், முதலாம் மாற வர்மன் சுந்தரபாண்டியன் போன்றவர்களின் கல்வெட்டுகள் கண்டோம்.
கள ஆய்வாளர்கள் துணையுடன் பல்வேறு அரிய தகவல்கள் பெற்றோம். அத்தனையும் பதிவிட ஒரு தொடர் தேவை. எனவே ஒரு சிறு பகுதி மட்டும் இங்கே...
சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில் தாலுகா மறவமங்கலம் அருகில் புரசடை உடைப்பு கிராமத்தில் பெருங்கற்கால புதைவிடப் பகுதி அமைந்துள்ளது. இதில் காலக்கணக்கீட்டுக்கான நிறைய நடுகற்கள் நடப்பட்டுள்ளன.
காலக் கணக்கீடு பற்றிய ஒரு சிறு பார்வை...
பூமியானது 23 1/2 ° சாய்வான கோணத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. எனவே சூரியன் பூமியின் நேர்கோட்டில் உதிப்பதில்லை. சில மாதங்கள் தெற்கு நோக்கியும் சில மாதங்கள் வடக்கு நோக்கி நகர்வதைப் போலத் தோன்றும். பூமத்திய ரேகையில் செப்டம்பர் மார்ச் ஆகிய மாதங்களில் நேர்கிழக்கில் உதயமாகும். டிசம்பர் மாதத்தில் தென் செலவு (solstice) அதாவது அந்த 23 1/2 ° பூமியின் சாய்வுக் கோணத்தை தொட்டுவிடும். ஜீன் மாதத்தில் தனது வடக்கு நோக்கிய பயணத்தை நிறைவு செய்து மீண்டும் தெற்கு நோக்கிய பயணத்தை தொடரும். (உத்தராயணம், தட்சிணாயனம்).
நமது அறிவியல் கண்டுபிடிப்பை சுமார் மூவாயிரத்திலிருந்து ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மிக அழகாக திட்டமிட்டுள்ளனர். வட்ட வடிவ கல்லொன்றையும் குறிப்பிட்ட தொலைவில் மூன்று நடுக்கற்களையும் நட்டு வைத்துள்ளார்கள். நாம் அந்த வட்ட வடிவக்கல்லில் அமர்ந்து அந்த குறிப்பிட்ட மாதங்களில் பார்க்கும் பொழுது அந்தந்த குறிப்பிட்ட கற்களின் பின்னால் சூரியன் உதயமாவதைக் காண முடியும். இவை மட்டுமல்ல சூரியன் மறையும் திசையையும் கணக்கிட்டு கற்கள் நடப்பட்டுள்ளன. இந்த கல் அமைப்பு சூரியனின் வட தென் இயக்கங்களை அறிந்து கொள்ள அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நட்சத்திர வடிவ கற்கள் நிலவின் பல்வேறு தோற்றங்களை வடிக்கும் கற்களும் இருக்கின்றன. நிலவின் போக்கை அறிந்து அதற்கான கணக்கீட்டு கடிகாரமும் அமைத்துள்ளார்கள். ஆக சூரிய கடிகாரம் சந்திர கடிகாரம் என இயற்கையைக் கணித்து இயற்கையுடன் இயைந்து வாழ்ந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
எதற்காக இந்த காலக்கணிப்புகள் என்றொரு ஐயம் எழுகிறது அல்லவா நண்பர்களே? பூமியின் தட்பவெப்ப நிலையை அறிந்து தனது செயல்களை அமைத்துக் கொள்வதற்காக அதாவது மழை வெயில் காலங்களை கணக்கிட்டு விவசாயத்தில் நடுகை அறுவடை கணக்கிடவும் பல்வேறு பணிகள் மேற்கொள்ளவும் இக்காலக் கணக்கீடு ஏற்படுத்திக் கொண்டான் மனிதன். தவிர அக்காலத்தில் கல் மணிகள், பாசிகள் போன்றவைகள் இந்தப் பகுதியிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. வணிகம் கடல் மார்க்கமாகதானே நடந்தது? எனவே மழைக்காலங்களை அறிந்து அதற்கேற்ப தனது வணிக காலத்தை திட்டமிட்டு அமைத்துக் கொள்வதற்கு இக்கால கணக்கீட்டை பயன்படுத்தினான். அண்ணாந்து பார்க்கும்படி நெடுநெடுவென உயரமாக இருந்த இந்த நடு கற்கள் நம்மை மலைக்கத்தான் வைத்து விட்டன. இந்த காலக்கணக்கு நடுகற்கள் இருக்கும் இடம் மழை தேங்காத மேட்டுநிலப் பகுதி. இந்த இடத்தில் இருந்து வானத்தின் அடிப்பரப்பு வரை காணமுடியும்.
அப்படியே அந்த வட்டக்கல்லில் அமர்ந்து கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டோம். தமிழனாய் பிறந்ததில் கொஞ்சமே கொஞ்சம் திமிர் வருவதைத் தடுக்கதான் இயலவில்லை.
புரசடை உடைப்பு தொல் குடியிருப்பு ஈமக்காடு பகுதிக்கு நாங்கள் சென்ற சமயம் வருண பகவானும் மிகுந்த உற்சாகத்துடன் உடனிருந்தார். அதனால் ஏற்பட்ட மண் அரிப்பில் ஒரு கருப்பு நில முதுமக்கள் தாழி, கருப்பு சிகப்பு நிற மண்பாண்டங்கள் மற்றும் அதன் எச்சங்களைக் கண்டோம். அந்த தாழியின் உடைந்த பாகங்களில் கூட வளைவு மற்றும் நேர்கோடுகள் வரையப்பட்டிருந்ததைக் கண்ட பொழுது தமிழனின் கலையார்வம் உணர்ந்து வியந்தோம்.
திருமலை பாறை ஓவியங்கள் அனைத்திலும் அங்கு கிடைக்கும் பச்சிலை தாவரங்களை கசக்கி பிழிந்து அதிலிருந்து வண்ணங்கள் எடுத்து பயன்படுத்தி இருக்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வண்ணம் தீட்டப்பட்ட ஓவியங்களில் வண்ணம் இன்னும் மாறாமல் இருப்பது அதிசயம்தான். இதில் பெண் ஓவியமும் உண்டு. காலக் கணக்கீட்டு நடு கற்களிலும் பெண்ணுருவம் கொண்ட கல் உள்ளது. தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் பெண் தெய்வ வழிபாடு இன்றுவரை முதன்மையாக உள்ளது.
இயற்கை வண்ணங்கள் பற்றி கூறும்பொழுது “ஙே” என்று பார்த்துக் கொண்டு நின்றதாலோ என்னவோ திரு ரமேஷ் அவர்கள் அருகில் இருந்த ஒரு செடியை காண்பித்து இதுவும் வண்ணம் தரும் இலைகள்தான் என்றார். உடனே அதிலிருந்து ஒரு இலையை பற்றி கைகளில் தேய்க்கச் சொன்னார். நான் ஏற்கனவே மருதாணி வைத்திருந்தேன். அதே மருதாணி நிறம் கைகளில் வருகிறது. இரண்டு மூன்று நாட்கள் போகாது என்றார். போகத்தான் இல்லை. இப்படி வியந்த விடயங்கள் பல.
நம் ஆதித்தமிழனின் வாழ்வியல் கண்டு வியந்தோம், கரைந்தோம், நெகிழ்ந்தோம், சிறந்தோம். காட்சிகளைக் கண்கள் நிறைய பதித்துக் கொண்டு, கருத்துக்களை இதயம் தளும்பத் தளும்ப நிறைத்துக் கொண்டு, நம் இதயச்சுவற்றில் இந்த இனிமையான நினைவுகள் ஓவியமாய் சிற்பமாய் ஒளிர்வதை ரசித்துக்கொண்டே திரும்புகின்றோம்…
(நன்றி, புகைப்படங்கள்: திரு. இலந்தைகரை ரமேஷ்)