

ரவி, நோக்கியா 1100 போன் இரண்டு முறை அடித்ததைக் கேட்கவில்லை. மூன்றாவது முறை அடிக்கும் போது கேட்டதும் திடுக்கிட்டு விழித்தான். போனைக் கண்டதும் முதலில் ஞாபகம் வருவது முனிசிபாலிடியில் வேலை பார்க்கும் பெரியப்பாவைத்தான். அவருக்கு இரண்டு பெண்கள். திருமணம் ஆகிவிட்டது. அவனிடம் மிகவும் பாசமாக இருப்பார்.
மணி ஒன்பதாகிவிட்டது. இன்னும் இரண்டுமுறை அடித்ததை கனவில் கேட்பது போல் கேட்டான். ரிங் டோன் நின்று விட்டது. கூரையாக இருந்த தகர ஷீட்டில் இருந்த ஓட்டைகள் வழியாக சூரிய ஒளி புள்ளிப் புள்ளியாக வீட்டுக்குள் விழுந்து கொண்டிருந்தது.
வெக்கை ஏறத் தொடங்கிவிட்டது. தகர ஷீட்டுகளால் ஆன பக்கவாட்டுச் சுவர்களும் இன்னும் கொஞ்ச நேரத்தில் சூடேறத் தொடங்கி விடும். அம்மா வேலைக்குப் போயிருக்க வேண்டும். ஆறு மணிக்கு வேலை செய்யும் இடத்தில் இருக்க வேண்டும். இன்னும் கொஞ்ச நாளில் விடியும் முன்னர் காலை மூன்று மணிக்கே போக வேண்டுமாம். அவர்களின் மேஸ்திரி சொல்லியிருந்தார். கோர்ட்டில் சொல்லிவிட்டார்களாம். காலை ஆறு மணிக்கு மேல் தெருக்களைக் கூட்டிப் பெருக்கினால் தூசி காற்றில் பரவி சூழலை மாசுபடுத்துகிறதாம். சாதாரண மக்கள் சுவாசிப்பதற்குக் கடினமாக இருக்கிறதாம். நீதிபதிகள் சகல அதிகாரமும் படைத்தவர்கள்.