
ஊரில் புகழ்பெற்ற மாரியம்மன் திருக்கோவில் குடமுழுக்கு திருவிழாவின் போது தான், என் கல்லூரித் தோழி தேன்மொழியை பல வருடங்கள் கழித்து சந்தித்தேன்.
அவள் தான் என்னைத் தேடி வந்து சந்தித்துப் பேசினாள். “என்ன மங்கை, என்னை அடையாளம் தெரியவில்லையா.? அதற்குள் மறந்துவிட்டாயா..” என கோபத்துடன் கேட்ட போது திகைத்துப் போனேன்.
உண்மையில் எனக்கு அவளை அடையாளம் தெரியவில்லை! “ஆமாம் மன்னித்துக் கொள், ஏழெட்டு வருடம் ஆகிவிட்டதல்லவா. அதனால் தான்..” என இழுத்தேன்.
“எத்தனை வருடம் ஆனால் என்ன, இத்தனை ஆயிரம் பேர் கூட்டத்தில் நான் உன்னை சரியாக கண்டுபிடிக்கவில்லை..? உனக்கு மட்டும் என்னவாம்..?” என கொக்கி போட்டாள்.
சிகை அலங்காரம் மாற்றியிருந்தாள், உடம்பு கொஞ்சம் கூடியிருந்தது, நவீன உடையில் இருந்தாள்.. இத்தனை மாற்றங்கள் செய்திருந்தும், வருடங்கள் பல கடந்திருந்தாலும் நான், பார்த்தவுடனே கண்டுபிடிக்க வேண்டுமாம்.! நானோ அதே அறுபது கிலோ எடையுடனும், அதே எளிய தோற்றத்துடனும், அப்போதிருந்த அதே மாதிரியாகவும் தான் இருந்தேன். அதனால் தான் அவள் என்னை மிக சுலபத்தில் கண்டுபிடித்திருக்கிறாள்.