சிறுகதை: கல் - நகை!

நீண்ட நாட்களாக சாலை போடாமல் கொட்டப்பட்டு கிடந்த கற்கள் தன் மனைவியின் செயினைக் காப்பாற்ற உதவியதற்கு கவுன்சிலருக்கு மனதார நன்றி கூறினான் நந்தகுமார்.
Man, Woman and Thieves
Tamil short Story | Man, Woman and ThievesAI Imge
பிரபு சங்கர்

About 55 years of experience in journalism, writing and taking photographs. Contributed to all the Tamil magazines of all periodicities. Developed skill through the guidance of Sri Savi, Editor, Dinamani Kadir. Have written hundreds of articles on various subjects; nearly 300 short stories; 12 novels and published hundreds of photographs. Have brought out 30 books, Worked as 1. Sub Editor in Ambalam, Net magazine under Sri Sujatha and Sri Thiruppur Krishnan; 2. Sub Editor in Kumudam Bhakthi Special and 3.Editor-in-Charge for Dinakaran Aanmigam magazines.

Updated on
Kalki Strip
Kalki Strip

‘தேர்தல் சமயத்தில் கூழைக் கும்பிடு போட்டபடி ஓட்டு கேட்க வரும் பணிவு, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, பதவியிலும் அமர்ந்து விட்ட பிறகு போயே போச்சு! அஞ்சு வருஷம் முடிஞ்ச ஊழல்லாம் பண்ணிவிட்டு, அடுத்த தேர்தல் சமயத்திலேயும் இதேபோல கூழைக் கும்பிடு! சலுகைகளும், இலவசங்களும், மானியங்களும் தருவதாக ஏகப்பட்ட வாக்குறுதிகள், அவற்றைப் பொது மக்களுக்கு வழங்கும் சாக்கில் முடிந்தவரை ஊழல்… என்ன அரசியலோ, என்ன கட்சிகளோ, என்ன மக்களோ…!’ – நந்தகுமார் சலித்துக் கொண்டான். அவனைப் போலவே அநேகம் பேர் இதே கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும், விடிவு கிடைக்காததுதான் ஐந்தாண்டு துக்கம்.

ஆனாலும், இதோ இந்தப் பகுதி கவுன்சிலர் கொஞ்சம் சமுதாய அக்கறை கொண்டவர் போலிருக்கிறது. சாலை போட முயற்சி எடுத்திருக்கிறார் என்று தெரிகிறது. அவன் வசிக்கும் பகுதியில் நாலைந்து தெருக்களில் அந்த ஆர்வம் கண்கூடாகத் தெரிந்தது.

ஆனால், அவன் வீட்டை ஒட்டி மேற்கு நோக்கிச் செல்லும் சாலையில் மட்டும் கருங்கல் ஜல்லி குவித்துப் போடப்பட்டு மாதம் மூன்றாகப் போகிறது. இன்னும் ரோடு போடும் வழியைக் காணோம். குண்டும், குழியுமான சாலையில் போய் வந்து உடம்பு வலி ஏற்படுவதோடு, இப்படி சும்மாவானும் குவித்து வைக்கப்பட்டிருக்கும் கல் குவியலும் பாதி சாலையை அடைத்துக் கொண்டு போக்குவரத்தை ரொம்பவும் குறுக்கி விடுகிறது. அதேசமயம், ‘இந்தத் தெருவில் வசிக்கும் ஒரு பயலும் ஏன் கொஞ்சம்கூட அக்கறையே எடுத்துக் கொள்ளவில்லை? எவனுமே புகார் கொடுத்ததாகத் தெரியவில்லையே!’ என்று அந்தத் தெருவாசிகளை நொந்துகொண்டான் நந்தகுமார்.

சனிக்கிழமை. அரைநாள்தான் அலுவலகம். மனைவி சுடச்சுட மதிய உணவைத் தயார் செய்திருப்பாள். நாக்கை சப்புக் கொட்டிக் கொண்டே தன் ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தான் அவன்.

தன் பகுதியில் கல் குவிக்கப்பட்டிருந்த அந்தத் தெருவுக்குள் ஸ்கூட்டர் நுழைந்தபோது சரமாரியாக சரளைக் கற்கள் பறந்து வருவதைக் கண்டான். திடுக்கிட்டான். இது என்ன புது மாதிரி உத்தி? கற்களை வீசி எறிந்தும்கூட சாலை போடுவார்களா என்ன? உடனே தற்காத்துக் கொள்ள ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்திவிட்டுப் பார்த்தான்.

சற்றுத் தொலைவில் ஒரு பெண் கல் குவியலிலிருந்து கற்களை எடுத்து வீசிக் கொண்டிருந்தாள். அதேசமயம், டூவீலரில் இரண்டு ரௌடிகள் (பார்த்தால் அப்படித்தான் இருந்தார்கள். அவர்களுடைய தாடியும், ஹேர் ஸ்டைலும்… சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் வரும் அதே ரௌடிகள் போல!) தன்னைக் கடந்து வேகமாகச் செல்வதையும் கண்டான்.

அது சரி, இப்படி சரமாரியாகக் கல் எறியும் காரிகை யார்? அது… அட, அவன் மனைவி சரண்யா அல்லவா?

பதைபதைப்புடன் அவளருகே ஓடிச் சென்றான் நந்தகுமார். “என்னம்மா, என்னாச்சு? ஏன் இந்த கல் வீச்சு?” என்று பதட்டத்துடன் கேட்டான்.

அவளோ புசு புசு வென்று கோபப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். “நீங்க ஆபீஸ்லேர்ந்து வர்றதுக்குள்ள ஏற்கெனவே நீங்க சொல்லியிருந்தபடி பேங்க்குக்குப் போய் வேலையை முடிச்சுட்டு திரும்பிகிட்டிருந்தேன்…”

அவளுடைய பொறுப்புணர்ச்சியைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்த நந்தகுமாருக்கு அப்புறம் என்ன நடந்தது என்று கேட்கவும் தோன்றவில்லை.

“பொறுக்கிப் பசங்க. இந்த ரோடும் ஜிலோன்னு இருக்கா, பகல் நேரம்னும் பார்க்காம என் கழுத்து செயினை அறுக்க வராங்க,” என்று முகம் சிவக்கப் பொருமினாள்.

இதையும் படியுங்கள்:
சிறுகதை: தாய்!
Man, Woman and Thieves

“நல்ல வேளையா இங்க ரோடு போட கருங்கல் ஜல்லி கொட்டி வெச்சிருந்தாங்களா, அதிலேர்ந்து கல்லெடுத்து வீசி அடிச்சேன். அவ்ளோதான் பசங்க பிச்சுகிட்டு ஓடிட்டானுங்க…” என்று தொடர்ந்து சொன்ன சரண்யா, பறிபோகாத தன் தங்க நெக்லஸை இப்போது பத்திரமாகக் கைப்பைக்குள் வைத்துக் கொண்டாள். அவளுடைய கழுத்தில் கைவைக்க முயற்சித்த டூவீலரில் வந்த வழிப்பறித் திருடர்கள் முகத்திலும், முதுகிலும் இவளுடைய கல்லடி பட்டு அந்த வேதனை தாங்காமல்தான் தன்னைக் கடந்து பறந்து போயிருக்கிறார்கள் என்பதை நந்தகுமார் புரிந்து கொண்டான்.

சாலை அமைப்பதில் தாமதம் ஏற்படுகிறதே என்று நொந்து கொண்டது போக, அந்தக் கல் குவியல் தன் மனைவிக்கு சமயோசித சிந்தனையையும், தைரியத்தையும் அளித்ததே அதற்காக வேணும் அந்தத் தாமதத்தைப் பொறுத்துக் கொள்ளலாம் போலிருந்தது நந்தகுமாருக்கு.

கல் குவியலுக்கும், கவுன்சிலருக்கும் மனதார நன்றி சொல்லிவிட்டு மனைவியை ஸ்கூட்டரின் பின்னால் அமர்த்திக் கொண்டு வீட்டுக்குச் சென்றான் நந்தகுமார்.

அன்றைய மதிய உணவு அட்டகாசமாக இருந்தது!

logo
Kalki Online
kalkionline.com