
திடீரென்று அந்தச் சத்தம் கேட்டது. இயந்திரத்தினுள் ஏதோ வெடித்திருக்க வேண்டும்.
கோழித்தூக்கம் போட்டுக்கொண்டிருந்த ராமநாதன் பயந்து துள்ளி நிலத்தினில் விழுந்தான். நித்திரை விழித்துக் காவலுக்கிருந்த சுந்தர் வெலவெலத்து சுவர்க்கரை ஓரமாக ஒதுங்கினான்.
ராமநாதனும் சுந்தரும் அந்தத் தொழிற்சாலையின் சாதாரண தொழிலாளிகள். நான் தொழிற்சாலையில் அதி முக்கிய ஒரு சடப்பொருள் - கட்டில்.
"என்ன நடந்தது சுந்தர்? என்ன நடந்தது?" விழுந்து கிடந்தபடியே ராமநாதன் கத்தினான்.
"ஏதோ 'றோ மில்லு'க்குள்ளை வெடிச்சிருக்க வேணும்!" இன்னமும் பயந்தபடியே முணுமுணுத்தான் சுந்தர்.
றோ மில்லைச் (Raw Mill) சுற்றி புகை கிளம்பிக் கொண்டிருந்தது. இரண்டு பேரும் புகைமூட்டத்தினுள் சிக்கினார்கள். ஒவ்வொன்றாகத் தூரத்தே எரிந்து கொண்டிருந்த விளக்குகள் அனைத்தும் மெல்ல அணைந்து தொழிற்சாலை இருளில் மூழ்கியது. 'சைரன்' மூன்று முறை கூவியது.
"நான் ஒருக்காப் போய் இஞ்சினியருக்கும் போர்மனுக்கும் சொல்லிப் போட்டு வாறன்" சுந்தர் படிகளினின்றும் கீழே இறங்கினான்.
விழுந்து கிடந்த ராமநாதன் - எழுந்து என் மீது படிந்திருந்த தூசியைத் தட்டித் துடைத்துவிட்டு மீண்டும் குந்தினான்.