கட்டுக் கடங்காத சொத்துக்கள் இருந்தும், கணவனோடு சேர்ந்து வாழ முடியவில்லையே என்ற ஏக்கம், கன்னிகாவுக்கு மிக அதிகமாகவே உண்டு!
அப்பாவின் தோட்டம் - தொறவுகள், அழகிய உள்முற்ற வீடு, அத்தோடு அவரின் பண்பான குணத்தால் பாசங்கொண்ட ஊர் மக்கள் என்று, அசையாச் சொத்து, அசையும் சொத்தென்று அத்தனைக்கும் ஒரே வாரிசு அவள்தான்! ’விதையொன்று போட சுரை ஒன்றா முளைக்கும்!’ என்பதற்கிணங்க, பண்பாளரான அவருக்கு எல்லாவிதத்திலும் அவர் குணத்தையேயொத்த மகளாகத்தான் கன்னிகா இருந்தாள்! அவர் இருந்தபோதும், அவருக்குப் பின்னும் கன்னிகாவை ஊர் மெச்சித்தான் கொண்டாடிற்று!
கணவர் கந்தவேலும் அன்பான, அப்பழுக்கற்ற கணவராகத்தான் அவளோடு சேர்ந்து வாழ்ந்தார்! ’முடிந்தால் ஊர் மக்களுக்கு உதவுவது; முடியாவிட்டால் ஒதுங்கிக் கொள்வது!’ என்ற உயரிய சிந்தனை வழிதான் அவர்கள் வாழ்வை ஓட்டினர்! யாருக்கும் மனதாலும் தீங்கிழைக்காத மனமொத்த ஜோடியாகத்தான் அவர்கள் அந்தவூரில் வலம் வந்தார்கள்!
அவர்கள் அன்பின் அடையாளமாக ஆனந்த் பிறந்தான்! அவனின் ஒவ்வொரு பிறந்த நாளையும் ஊரே விழாவாகக் கொண்டாடியது! பக்கத்து ஊர் பம்பர சாமியாரின் தலைமையில்தான் ஒவ்வொரு ஆண்டும் விழா!
சின்ன நிகழ்ச்சி என்றாலும் அதை எப்போது, எங்கு, எப்படி நடத்துவது என்பதைப் பம்பர சாமியாரிடம் ஆலோசித்து, ஆசி பெறாமல் அவர்கள் செய்ததில்லை!சாமியாரும் எளிமையாக வாழ்பவர்; ஆற்றங்கரைக் கீற்றுக் குடிசையில், ஐந்து, பத்து சிஷ்யர்களுடன் அமைதியாக இருப்பவர்; சுற்றுப்பட்ட கிராமங்களுக்குக் கால் நடையாகவே சென்று, இறை பக்தியைப் பரப்பும் இனியவர்! குற்றங்குறைகளுக்கு அப்பாற்பட்டவர்!
நன்றாகக் கழிந்து கொண்டிருந்த கன்னிகாவின் வாழ்வில் திடீரெனத்தான் அந்தப் புயல் வீச ஆரம்பித்தது! காய்ச்சல் என்று படுத்த கந்தவேல் விரைவில் குணமாகவில்லை. பம்பர சாமியார் பார்த்து விட்டு உடன் மருத்துவமனைக்கு அனுப்பச் சொன்னார்! எத்தனையோ மருத்துவ நிபுணர்கள் எதிர்த்து நின்ற போதும், எமனே வெற்றி கொண்டான்! சர்க்கரை வியாதியும், மஞ்சக்காமாலையும் கை கோர்த்த காரணத்தாலேயே அவரைக் காப்பாற்ற முடியவில்லையென்று மருத்துவ அறிக்கை கூறியது!
இடிந்து போன கன்னிகா இயல்புக்குத் திரும்ப வெகு காலம் ஆனது. அதுவும் அன்பு மகன் ஆனந்த்தினால்தான்! சர்க்கரை வியாதியும் தன் கணவன் இறப்புக்கு ஒரு காரணம் என்பதையறிந்ததிலிருந்து அவளுக்கு இனிப்பின் மீதே ஏகப்பட்ட வெறுப்பு!
ஆனால் இளைஞன் ஆனந்திற்கோ இனிப்பின் மீது ஏகப்பட்ட ஈர்ப்பு! அதிலும் லட்டு என்றால் கொள்ளை ஆசை! அதையே முழுச் சாப்பாடாகச் சாப்பிடக் கூடத் தயாராக இருந்தான் அவன்! இதனாலேயே அவளுக்கு அவன் ஆரோக்கியத்தின் மீது பயம் அதிகரிக்க, அன்று சாமியாரின் குடிலுக்கு மகனையும் அழைத்துச் சென்றாள் அவள்!
மகனை வெளி அறையில் உட்கார வைத்து விட்டு, அவள் உள்ளே சென்று சாமியாரிடம் விஷயத்தைக் கூற, அவரோ 15 நாட்கள் கழித்து மகனுடன் வருமாறு கூறினார்.
வெளியில் வந்த அவளுக்கு ஏகப்பட்ட குழப்பம்! கணவன் இறந்த காரணமும் சாமிக்குத் தெரியும். தன் பயம் நியாயமானது என்பதையும் சாமி அறிவார். இருந்தும் பதினைந்து நாட்கள் அவகாசம் எதற்கென்று அவளுக்குப் புரியவில்லை! சாமி எதையும் காரணமின்றிச் செய்ய மாட்டார் என்ற நம்பிக்கையும் இருந்ததால் வீட்டிற்குச் சென்றனர்.
சரியாகப் பதினைந்தாம் நாள்! குடிலுக்கு அவர்கள் வந்ததும், சாமியே வந்து வரவேற்று, ஆனந்த்தை உள்ளே அழைத்துச் சென்றார்! கன்னிகாவை வெளியில் இருக்குமாறு சைகை காட்டிச் சென்றார்!
உரிய விதத்தில் ஆனந்த்துக்குப் புத்திமதி கூறிய அவர், கன்னிகாவின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் அவன்தான் என்பதையும் விளக்கி, மெல்ல இனிப்பு அதிகம் சாப்பிடுவதைக் குறைத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தி வெளியே அனுப்பி விட்டு, கன்னிகாவை உள்ளே அழைத்தார்!
‘என்னம்மா கன்னிகா! உன் மகனுக்கு வேண்டிய அறிவுரையை வழங்கி விட்டேன். உன் மனசுக்குள்ள ஒரு பெருஞ் சந்தேகம் இருக்குமே. இதைச் சொல்ல சாமி எதுக்குப் பதினைஞ்சு நாள் டைம் எடுத்துக் கிட்டாருன்னு!' சாமி சற்றே சிரித்தபடி சொன்னார்!
‘அது வேற ஒண்ணுமில்லம்மா! நீ வந்த அன்னிக்கி அப்போதான் லட்டு சாப்பிட்டுட்டு உட்கார்ந்திருந்தேன்! எனக்கும் லட்டுன்னா ரொம்பப் பிடிக்கும்மா! எனவே அன்னிக்கி உன் மகனுக்குப் புத்திமதி சொல்ற எடத்ல நான் இல்ல. ரொம்ப மெனக்கெட்டு நேற்றையோட லட்டு சாப்பிடறதை நிறுத்திட்டேன்! அதான் இன்னிக்கி ஒங்க ரெண்டு பேரையும் வரச் சொன்னேன்!’ என்று சாமி சொல்ல, பொங்கிய கண்ணீரைத் துடைத்து விட்டு கன்னிகா இரு கைகளாலும் சாமியை வணங்கினாள்!
'முதலில் எனக்கு! அப்புறந்தான் பிறருக்கு' என்று எண்ணும் இவர் போன்ற சாமியார்கள் உள்ள வரை மழைக்கும் குறைவிருக்காது! நல்ல மனித மனங்களுக்கும் அழிவிருக்காது!