“அப்பா, தூக்கம் வரலைப்பா! ஒரு கதை சொல்லு! “ நச்சரித்தான் பிள்ளை. நீண்ட, அகன்ற கண்களும், செதுக்கிய மூக்கும், வகிடெடுத்து சற்று ஸ்டைலாக வாரப்பட்ட அடர்ந்த தலைமுடியும்… கொள்ளை அழகு ரவி. அப்பாவின் கார்பன் காப்பி அவன்.
அன்றைய ஆபீஸ் யூஷுவல் டென்ஷன், டிரைவர் வேறு லீவு, டிராபிக் நெரிசலில் வண்டி ஓட்டிய எரிச்சல், எல்லாமாக சேர்ந்து களைப்பு மிக அதிகம். மனைவி வேறு ஊரில் இல்லை. அம்மாவுக்கு உடல் நலமில்லை என்று தன் அண்ணன் மனைவி கேட்டுக் கொண்டதால் உதவிக்கு மதுரை சென்றிருந்தாள். வர நான்கு நாட்கள் ஆகலாம். சமையல்காரர் மற்றும் வேலைக்காரரின் உதவியோடு வீட்டையும் பிள்ளையையும் பார்த்துக் கொள்வதாக ஏற்பாடு.
சாப்பிட்டாயிற்று. ரவி தூங்கினால் மிச்ச சொச்ச ஆபீஸ் வேலையை முடிக்கலாம். அவனோ கதை கதை என்று படுத்துகிறான். ‘அம்மாவைப் கொண்டா’, என்று கேட்டுவிட்டால்… என்று பயந்து, “என்னடா கதை, என் கதையே பெரிய கதையா இருக்கு“, என்று அலுத்துக்கொண்டவனை, “உன் கதையை சொல்லுப்பா“, என்றான் ரவி.
அந்த மலர்ந்த முகத்தை பார்த்து, சற்று மனம் லேசானவனாக, “ஓகே! கெட் ரெடி ஃபார் எ ஃபிளாஷ் பேக்! “ என்றார் அப்பா…….
"ஒரு கணம்: சிறிய கவர் ஒன்றில் கத்தை கத்தையாகப் பணம் கிளாஸ் ரூமில் ஒரு பெஞ்ச்சில் கிடந்தது. அடுத்த கணம்: இல்லை. ‘நல்ல வேளை, யாரும் பார்க்கலை’, என்று அவன் அதை தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு விட்டான். ஒருவரை ஒருவர் சீண்டுவதும், கத்தி ரகளை செய்வதுமாக அந்த திரண்ட வகுப்பறை அலை மோதியது. ஒரு டீச்சர் போய் மற்றொருவர் வரும் சமயம். கிளாஸ் லீடரின் கூக்குரலுக்குக் கட்டுப்படாமல் நடந்த அமர்க்களத்தில் அவன் வெகு லாவகமாக பணத்தை அடித்து விட்டான். இயல்பாக நடப்பது போல வந்து தன் இடத்தில் உட்கார்ந்தவனை அவனது நண்பன் துடையில் கிள்ளி,
“எதுக்குடா உனக்கு அவ்வளவு பணம்? நான் பார்த்துட்டேன்" என்றான்.
“உஷ்… கண்டுக்காதே! உனக்கு ஒரு பங்கு வெட்டறேன்”, என்றான் திருடியவன்.
“ச்சீ, திருப்பி கொடுத்துடு, மரியாதையா. அது திலக்கின் பணம். ஃபைனல் எக்ஸாம் ஃபீஸ், லாஸ்ட் டெர்ம் ஃபீஸ் எல்லாம் லாஸ்ட் டேட்டில்தான் கட்டப்போறேன் என்று நேத்திக்கி திலக் சொன்னான்”, என்றான் நண்பன்.
வெகு அலட்சியமாக முகத்தை திருப்பிக் கொண்டு, “மை டியர் ஃபிரண்ட், நத்திங் டூயிங்”, என்றான் திருடியவன். தன் இனிய நண்பன் சரியான பயங்கொள்ளி என்று அவனுக்குத் தெரியும்.
“உனக்கு எதுக்குடா இத்தனை பணம்?" என்றான் நண்பன்.
பின் திடீரென்று ஏதோ பொறி தட்ட, “அந்த மீசைக்காரனைப் பார்க்க போறியா என்ன? “ என்று கேட்டான்.
இரண்டு நாட்களுக்கு முன், பள்ளி முடிந்து நண்பர்கள் இருவரும் சைக்கிளில் வீடு திரும்புகையில் எதிர்ப்பட்டு, சைக்கிளை மறித்து நிறுத்திய இரு நபர்களில், ஒருவன் மீசை, மற்றவன் மொட்டை. மீசைக்காரன், ”என்னடா குட்டிப் பையா! ‘மால்’ வந்திருக்கு. ‘டப்பு’ வெச்சுருக்கியா?” என்று கேட்டான். மொட்டை பேசவில்லை. கண்ணை உருட்டி விழித்து ஒரு இளிப்பு.
“இப்போ ஒண்ணுமில்லீங்க”, என்று மீசைக்காரனின் கையைத் தட்டி விட்டு சைக்கிளில் பறந்தான் அவன். ஒரு கணம் அந்த ரௌடிகளிடம் தனியே மாட்டிக் கொண்ட அந்த மற்றொரு பையனை, “யார்கிட்டயாச்சும் சொல்லுவே?” என்று கேட்டான் மீசை.
“இல்லை, ம்மமாட்டேன்”, என்று திக்கித் திணறிய சிறுவனின் அவஸ்தையை வெகுவாக ரசித்து, “தோடா!”, என்று சிரித்தபடி மீசை அவன் கையை விட்டான். சிறுவன் ஒரே ஓட்டம்.
இப்போது எல்லாம் சட்டென்று புரிந்தது. நண்பனை வகுப்பறைக்கு வெளியே அழைத்து சென்று, “டேய்! இப்போ பணத்தை உடனே நீ திருப்பித்தரலைன்ன, நான் பயந்து பேசாமல் இருக்க மாட்டேன். நிச்சயம் டீச்சர் கிட்டே சொல்லிடுவேன்”, என்றான்.
"டேய், உனக்கென்ன தெரியும்? அன்னிக்கு ஃப்ரீயா ஒரு டோஸ் கொடுத்தான் மீசை… எக்ஸாம், மார்க்கு எந்த ஃபியரும் இல்லாத ஒரே ஜாலி“ என்றான் திருட்டுப் பயல்.
“அடப்பாவி! ட்ரை வேற பண்ணிட்டியா? வேண்டாம்டா. நான் தயங்காம ஹெட் மாஸ்டர் கிட்டேயே போய் ரிபோர்ட் பண்ணிடுவேன். சிகரெட், டிரக்ஸ்னு போனா கடைசி ஸ்டாப் ஜெயிலோ ஆஸ்பத்திரியோதான். அப்பா, அம்மா அடிக்கடி வார்ன் பண்ணுவாங்க. லைஃப் பாழ்தான் அப்புறம்.” என்றான்.
“போடா", என்று அவனை உதறினான்.
கணத்தில் அமைதியான சாதுப்பையன். “இப்போ நீயாக பணத்தை திருப்பி கொடுத்துடு. இல்லாவிட்டால் நான் திலக்கைக் கூப்பிட்டு சொல்லிடப் போறேன்”, என்றவாறு கிளாஸுக்குள் சென்றான்.
“கதை முடிந்தது... ஃபிளாஷ் பேக் ஓவர்!” என்ற அப்பாவிடம்,
"என்னப்பா, உங்க ஃபிரண்டை மாட்டி விட்டுட்டீங்களா?”, என்று கேட்டான் ரவி அப்பாவியாக.
“இல்லை! பணத்தை திருப்பி கொடுத்துட்டேன் ரவி!“ என்றார் அப்பா.