

பதினேட்டு மணி நேரம் விமானத்தில் உட்கார்ந்தே வந்த பிரயாணக் களைப்பு கண்களை அழுத்திக் கொண்டிருந்தது. ஆனாலும் தூங்க முடியவில்லை. ராஜீவ் மல்ஹொத்ரா, டெல்லி விமான நிலையத்திலிருந்து மயூர்விகார் காலனிக்குச் சென்று கொண்டிருந்தார். மணியைப் பார்த்தார். 12:20 இன்னும் அரைமணி நேரத்துக்கு மேலாகும். மாலையில்தான் இறுதிச் சடங்குகளைச் செய்ய முடியும் என்று சாச்சா (சித்தப்பா)வின் மகன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். கண்ணை மூடவில்லை. செல்போன் அடிக்கத் தொடங்கியது. முதலில் அம்மா பேசினார். பிறகு சாச்சாவின் மகன் சந்தீப், பிறகு குடியிருப்போர் நல சங்கத்தின் தலைவர், செயலாளர். இன்னும் என்னென்னவோ பெயர் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.