

பார்ட்டி கொடுத்த பணக் கவரினை நடுங்கும் கரங்களுடன் வாங்கிக் கொண்டார் பரமசிவம்.
“இப்பத் தான் என் வாழ்க்கையில முதல்முறையா லஞ்சம் வாங்கறேன்.”
அசட்டுத்தனமாகப் புன்னகைத்தார். கையில் பணம் உள்ள சந்தோசம், நேர்மையை மீறின குற்றஉணர்ச்சி, பணம் தந்தவனுக்கு விசுவாசம் காட்ட வேண்டிய கட்டாயம்... எல்லாம் கலந்து திகைத்து திணறிக் கொண்டிருந்தார்.
”கையிலேயே வெச்சிட்டிருக்கீங்களே. முதல்ல சரியா இருக்கான்னு எண்ணிப் பாருங்க சார்.” பணம் கொடுத்தவர் இறுக்கமான முகத்துடன் சொன்னார்.
”குறைவா இருக்குன்னு சொல்லி நம்ம வேலையை அரைகுறையா முடிச்சுத் தந்திடாதீங்க. என்னால சும்மாசும்மா இவ்வளவு தூரம் அலையமுடியாது.”
“சேச்சே, அப்படியெல்லாம் பண்ணமாட்டேன். வாங்கின காசுக்கு விசுவாசமா...” பரமசிவம் பணத்தை எடுத்து கொஞ்சம் வேகமாக எண்ணத் தொடங்கினார். அனைத்தும் ஐநூறு ரூபாய்த் தாள்கள்.
“என்ன பழைய நோட்டா எல்லாம்..? ஒண்ணோட ஒண்ணு ஒட்டிக் கிடக்கு, பதினெட்டு, பத்தொன்பது, இருபது..."
சட்டென அவரது டேபிளைச் சுற்றி ஆட்கள் சூழ்ந்தார்கள்.
அதிர்ந்து நிமிர்ந்தார். தாள்கள் சிதறி விழுந்தன.
“நாங்க லஞ்ச ஒழிப்புத் துறை!”
“எ... என்னது...”
பணம் கொடுத்தவர் வஞ்சகமாக சிரித்தார்.
“கடமையை செய்ய காசு வேணுமா? லஞ்சமா கேட்கிறே லஞ்சம்... அனுபவி!” கொக்கரித்தார்.
கையும் களவுமாகப் பிடிபட்டார் பரமசிவம்.
”லஞ்சம் வாங்கின குற்றத்துக்காக உங்களை கைது பண்றோம் மிஸ்டர் பரமசிவம்."
"ஜான், அவர் கையில விலங்கை மாட்டுங்க. வண்டியில ஏறுங்க பரமசிவம் சார். நேரா சிறைச்சாலை தான். அஞ்சு வருசம் தண்டனை உண்டு. இனி உங்க அரசாங்க வேலை அம்போ. பீஎஃப் பணம் கிடைக்காது.”
“அய்யய்யோ அய்யய்யோ” அலறினார் பரமசிவம். முகத்தில் அறைந்து கொண்டு அழுதார்.
“நான் இல்லை, நான் இல்லை” கதறினார்.
“எல்லாத்துக்கும் காரணம் என் சம்சாரம் காவேரி தான். அவதான் லஞ்சம் வாங்கச் சொல்லி என்னைக் கட்டாயப்படுத்தினா. ‘நாட்டுல எல்லோரும் வாங்கறாங்க உங்களுக்கென்ன கேடு’ன்னு பேசிப் பேசி, வார்த்தைகளால என்னை சித்திரவதை செஞ்சு, நகை வேணும், பங்களா வேணும்ன்னு நச்சரிச்சு, ஏதேதோ பேசி மனோவசியம் பண்ணி, தூய்மையான மனசோட இருந்த என்னைக் கெடுத்து, தப்பு செய்ய வெச்சது அவதான். அவளுக்கும் தண்டனை கொடுங்க. என்னை விட கூடுதலா..! அவளையும் பெண்கள் சிறையில தள்ளுங்க யுவர் ஆனர்…”
பத்திரிக்கைகளில் பெரிய எழுத்துக்களில் செய்தி வந்து, சமூக வலை தளங்களில் விவாதிக்கப்பட்டு, அக்கம்பக்கம் சிரிப்பாக சிரித்து, உற்றார் உறவினர் வெறுப்பில் காறி உமிழ்ந்து....
“அய்யோ...” பதறிப் போய் விழித்தெழுந்தாள் காவேரி.
உடலில் இன்னும் நடுக்கம் குறையவில்லை.
"எத்தனை மோசமான கனவு, சே!"
வியர்வையில் நனைந்திருந்தாள். மனதில் வெகுநேரம் படபடப்பு.
அருகில் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த கணவனை கவலையோடு பார்த்தாள். பாத்ரூம் போய்விட்டு தண்ணீர் குடித்து விட்டு வந்து படுக்கையில் விழுந்தாள். ஏனோ தூக்கம் தொடரவில்லை. ஏதேதோ சிந்தனைகளில் மனம் அலைபாய்ந்தது.
"ப்ச்." பெருமூச்சு வந்தது.
மறுநாள் காலை.
வழக்கம் போல டிஃபன் பாக்ஸ், குடை, ஸ்கூட்டர் சாவி, ஃபைல்கள் எல்லாம் சேகரித்துக் கொண்டு, துணி துவைத்துக் கொண்டிருந்த மனைவி காவேரியின் எதிரில் மரியாதைக்குரிய தூரத்தில் நின்றபடி பவ்யமாக கையசைத்தார் பரமசிவம்.
“கிளம்பட்டுமா காவேரி, இன்னைக்கு ஸ்பெசல் நாள் உனக்கு! நீ கேட்டதெல்லாம் நடக்கப் போகுது, ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறப் போகுது!”
பதில் பேசாமல் மெளனமாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள் காவேரி.
“பணம் கைக்கு வந்ததும் நான் போன் பண்றேன். ஆட்டோ பிடிச்சு வந்துடு. நேரா நகைக்கடைக்கு போயிடலாம்.”
“ஒரு நிமிசம்!” நகர்ந்த அவரைத் தடுத்தாள்.
“பணம், கிணம்ல்லாம் எதுவும் வாங்கற வேலை வெச்சுக்க வேணாம், எப்பவும் போகிற மாதிரி வழக்கம் போல போயிட்டு, அமைதியா வீடு வந்து சேருங்க அதுபோதும்.”
“என்னது... புரியல?” திகைப்புடன் பார்த்தார். “நீ தானே பணம் வாங்கச் சொன்னே? இப்ப திடீர்ன்னு மாத்தி... அவரு வந்தா நான் என்ன சொல்லி மறுப்பேன்?”
“சொன்னதைச் செய்யேன், எல்லாத்துக்கும் ஏன், எதுக்குன்னு காரணத்தைக் கேட்டுக்கிட்டு. பொண்டாட்டி என்ன சொன்னாலும் செஞ்சுடறதா? பின்விளைவுகளைப் பத்தி யோசிக்கிறதில்லை? பாரு, தப்பு செய்யறதுக்கும் ஒரு மனதைரியம், தனித்திறமை வேணும். அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்டே! உனக்கெல்லாம் அது வரவும் வராது. தப்புத்தப்பா தப்பு செய்துட்டு, முட்டாள்தனமா மாட்டிக்கிட்டு, போலீசு முன்னாடி தலைகுனிஞ்சு நிப்பே. இங்கே, நான் எல்லோர்கிட்டேயும் ஏச்சுப் பேச்சு வாங்கி, பதில் பேசமுடியாம அவமானப்பட்டு நிக்கனும். போதும்டா சாமி. உன்னையெல்லாம் என் தலைல கட்டி வெச்சானே என் அப்பன்காரன் அவனைச் சொல்லனும். எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம்...”
மனைவியின் வார்த்தைகளைப் புரிந்து கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் பரமசிவம்!