

“நீ நல்லா படிக்கணும் கௌரி. எதையும் நினைச்சு வருத்தப்படாம படிப்புல மட்டும் கவனத்த செலுத்து, எனக்கு அது போதும்.”
“அய்யோ... அதெல்லாம் சரி மாமா. நீ ஆசைப்பட்டபடி நான் படிக்கிறேன். அதுக்குன்னு இப்படியெல்லாம் நீ கஷ்டப்படணுமா சொல்லு. உடம்பு எப்படி கொதிக்குது பாரு. இந்த காய்ச்சலோட வேலைக்கு போறேன்னு சொல்ற... இப்படியெல்லாம் நீ கஷ்டப்பட்டு சம்பாரிக்கணுமா?” என்றாள் கௌரி.
“போன வாரமும் லோன் கட்டல கௌரி. இந்த வாரமும் கட்டலனா நல்லா இருக்காது” என்று அந்த உடல் வலியிலும் வேலைக்கு செல்ல தயாரானான் பிரபா.
“அதுக்குனு என்ன மாமா. போனவாரம் பாழாப்போன காய்ச்சல் எனக்கு வந்ததால மருந்து வாங்க பேங்க்குக்கு கட்ட வேண்டிய காச செலவு செஞ்ச. இப்ப உனக்கு காய்ச்சல். இரண்டு நாளா குறையாம இருக்கு. சொன்ன கேளு, இன்னைக்கு ரெஸ்டா இரு மாமா” என்றாள் கௌரி.