சிறுகதை: நாட்டு சர்க்கரை கடலை உருண்டை!

Tamil Short Story - Nattu Sakkarai Kadalai Urundai
Father and Son Talking
Published on

ஐம்பது வருடங்கள் முன்பு, கோபிநாத்தின் தந்தை ஊட்டியில் ஒரு பிரிட்டிஷ்காரர் வீட்டில் வேலை பார்த்து வந்த போது, அவரின் முதலாளி வீட்டில் சாக்லேட் தயார் செய்து விற்றுக் கொண்டிருநதார். பின்னர் ஃபேக்டரி ஆரம்பித்தார்.

அந்த நுணுக்கங்களைக் கற்ற பின்பு, தானும் வீட்டில் சாக்லேட் தயார் செய்து கொண்டிருந்த கோபிநாத்தின் தந்தைக்கு நேரமும் அதிர்ஷ்டமும் சாதகமாக இருந்தது.

ஆமாம். வேலை பார்த்து வந்த பிரிடிஷ்காரர் தாய் நாட்டுக்கு திரும்பவே, விசுவாச வேலையாள் கோபிநாத்தின் தந்தைக்கு, அந்தச் சாக்லேட் ஃபேக்டரியை எழுதிக் கொடுத்து விட்டுப் போனார்.

அது இன்று ஆல விருட்சமாக வளர்ந்ததற்குக் காரணம் கோபிநாத் மற்றும் அவருடைய தந்தையின் கடின உழைப்பு தான்.

நீலகிரியின் குளிர்ச்சியான தட்பவெப்ப நிலையும், சாக்லேட் உற்பத்திக்கு ஏற்றதாக இருந்தது. கோபிநாத் சாக்லேட் தயாரிப்பில் சாக்லேட்டை கைமுறையாக மென்மையாக்குவது மற்றும் 40% கோகோவைப் பயன்படுத்துவது போன்ற பழைய பிரிட்டிஷ் முறையைப் பின்பற்றினாலும், அவர்களின் சாக்லேட் ஒரு சிறந்த தரதத்துடன் இருந்ததினால் சாக்லேட்டுகள் வியாபாரத்தை அதிகமாக்கியது.

கோபிநாத் தன் கடுமையான உழைப்பின் பலனாக, இந்தியாவில் மட்டுமல்ல, உலகச் சந்தையிலும் இடம் பிடிக்க செயலில் இறங்கினார். ஆனால், உலகச் சந்தையில் போட்டி போடுவது அவ்வளவு எளிதல்ல என்று நினைத்த கோபிநாத், அந்தச் சாக்லேட் தொழிலில், நவீன எந்திரங்கள், கையாளும் திறமை, மாடர்ன் டெக்னாலஜி போன்றவற்றைக் கற்று வர எம்.பி.ஏ முடித்த மகன் சத்யாவை லண்டனுக்கு அனுப்பியிருந்தார்.

லண்டனில் படிப்பு முடிந்த சத்யா, கதர் வேட்டியுடன் இறங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்த கோபிநாத், சுதாகரித்துக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

"சத்யா நீ கத்து கிட்ட விஷயம், அனுபவம் எல்லாத்தையும் வைச்சு இன்னும் ஒரு வருடத்திலே உலகச் சந்தையில் நம்ம கம்பெனி இடம் பிடிக்கணும், சரியா?"

"சாரிப்பா? என்னால் அது முடியாது. அநியாயமா சம்பாதிச்சா அமைதியையும், நிம்மதியையும், இழக்க வேண்டிருக்குமப்பா. இயற்கை மனித தேவைக்குதான், கொடுத்து இருக்கே தவிரப் பேராசைக்கு இல்லை."

"வாட் நான்சென்ஸ் ஆர் யூ டாக்கிங்? இந்தத் தத்துவத்தைக் கத்துக்கவா உன்னை லண்டனுக்கு அனுப்பினேன்?"

"எந்திரங்கள் இல்லாமல், கை வேலைக்கு முக்கியத்துவம், மனித உழைப்பின் மேன்மைக்கு மரியாதை, நல்ல காற்றோட்டமான சூழல், ஏழை மக்களை வேலைக்கு அமர்த்தி, அவர்கள் வாழ்வை மேம்படுத்துவது... இது தான் காந்தியின் கொள்கை அறன்ப்பா. காந்தியமும் எனக்கு அங்கே போன பின் தான் புரிந்தது. மேலைநாடுகளில் காந்தியை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். நான் சுய தொழில் செய்யனும்ப்பா."

“இந்தியாவில் உள்ள எல்லோருமே காந்தியை மறந்து போன நிலையில், நீ காந்தியை கொண்டாடுவது சிரிப்பாக இருக்கு சத்யா. இதைத் தான் ஒங்க தாத்தா காலத்திலருந்து செஞ்சுக்கிட்டு வரோம்;. வெற்றியும் அடைஞ்சு இருக்கோம். இந்தத் தொழிலில் இன்னும் என்னென்ன புதுமைகள் செஞ்சு, இன்னும் எப்படி மார்கெட் பிடிக்கலாம் என்று சிந்திக்க, உழைக்கத் தான் உன்னை லண்டனுக்கு அனுப்பினேனே தவிரக் காந்தியம் கத்துக் கொள்ள இல்லை. இங்கு நேர்மை என்றால் என்ன அர்த்தம்? என்று கேட்கும் அளவுக்குப் போய் விட்டது?”

“ஒத்துக் கொள்கிறேன். ஆனா நீங்களும் அதைத்தானே செஞ்சுட்டு வரிங்க”.

“நீ என்ன சொல்லவரே?" கொஞ்சம் கோபத்துடன் கேட்டார் கோபிநாத்.

“எப்போதாவது தயார் செய்த பொருள்கள் சந்தையில் வியாபாரம் ஆகவில்லை என்றால் நீங்கள் செய்யும் தந்திரம்: ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று ஊறுகாய், சாக்லேட் முதல் தோசை மாவு வரை அவைகளைச் சந்தைப்படுத்த மக்கள் மனதை மூளை சலவை செய்ய வேண்டியது. இது எந்த விதத்தில் நியாயம்?“

"இத பாரு சத்யா! இப்போதெல்லாம் பயனாளிகளின் வாங்கும் திறன் குறைந்து விட்டது. அதனாலேயே தயார் செய்த பொருள்களை விற்க ஒன்று வாங்கினால் ஒன்று ஆஃபர் என்று கூவி கூவி விற்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பிசினஸ் என்பது பிளானிங் சிஸ்டம், மற்றும் ஆடிட்டிங் சிஸ்டம் போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு நீண்ட காலப் பிராசஸ்! இது கார்பொரேட் கண்களுக்கு மட்டுமே தெரியும்! உனக்கு சுய தொழில் செய்ய வேண்டும் என்று ஆர்வம் இருப்பதில் தவறில்லை; ஆனால் எந்தத் தொழில் செய்வது? அதை எப்படிச் செய்வது? என்னும் கேள்விகளுக்கான தீர்வுகளைத் தேடாமல், திடீரென இப்படி நீ சொல்வது பைத்தியக்காரதனம்.”

வாதங்கள் வார்த்தைகளாக வெடித்தன.

“இல்லை! நீங்க நினைப்பது தவறு. நான் செய்யப் போவது குடிசைத் தொழில். குடிசைத் தொழில் என்றால் குடிசையில், அதாவது ஒரு பனை ஓலை அல்லது தென்னை ஓலை வேய்ந்த குடிசையில், தொழில் செய்வது என்றல்ல. அதற்காகத் தனியாகப்பட்டறை/ தொழிற்சாலை/ கட்டமைப்பு இல்லாமல், வீட்டிலேயே செய்யும் தொழில் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை.

தொழில் என்பது நம்மை வாழ வைப்பதற்கான செயல்பாடு. இதில் முழு ஆர்வத்துடன் செயல்படவேண்டியது அவசியம். தோல்வியே வந்தாலும் அதிலிருந்து மீளுவதற்கான செயல்பாடுகளை உடனுக்குடன் திட்டமிட்டு தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டிய 'பிசினஸ் அறிவு' என்னிடம் உள்ளது. அந்தத் திறமை என்னிடம் இருப்பதாக உணருகிறேன்.”

இதையும் படியுங்கள்:
மனித குலத்தின் மாபெரும் துன்ப நிலை எது? இந்த குட்டிக் கதையை படிச்சு தெரிஞ்சுக்கோங்க!
Tamil Short Story - Nattu Sakkarai Kadalai Urundai

“மறுபடியும் சொல்கிறேன் உன்னிடம் எந்த அனுபவமும் இல்லை என்கிற நிலையில்  நீ எப்படி ஜெயிக்க முடியும்? நுகர்வோர் சுபாவம் - மாறி விட்டது. அதுவும் புதிய தயாரிப்புகள் என்றால் அந்தப் பக்கமே வருவதில்லை. ஆனால் இதற்கெல்லாம் விதி விலக்கு நாம் தயார் செய்யும் சாக்லேட். எப்போதும் அதற்கு டிமாண்ட். உன்னைப் பயமுறுத்துவதாக எண்ண வேண்டாம். எனது அனலைஸிஸ் இதுதான்”.

“நீங்க என்ன மூளை சலவை செய்தாலும் என் எண்ணத்தில் இருந்து விலகப் போவதில்லை. நான் உறுதியாக உள்ளேன். கார்ப்பரேட் உலகத்திலேயே வாழ்க்கை நடத்தும் நீங்க உழைப்பாளிகளை மூளை சலவை செஞ்சு, உற்பத்தியை பல மடங்கு, தந்திரமாகப் பெருக்கி கொள்ளும் போக்கு எனக்கு பிடிக்கலப்பா. நான் வேறொரு மனிதனாக உருவெடுத்துள்ளேன். உங்க வேவ் லெங்த்துடன் என்னுடையது இனி ஒத்து போகாது.

உங்க சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகளை விட, நான் தயார் செய்யப் போகும் அந்தப் பொருளில் உள்ள அதிகப் புரதச் சத்து, வெல்லத்தின் சேர்க்கை; அதிக இரும்பு மற்றும் செலினியம் சத்துக்கள் தசைகளை உறுதியாக்குகிறது – மூளையின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது – குறிப்பாகக் குழந்தைகளுக்கு! எந்தக் கெட்ட கொழுப்பும் அற்றது. மேலும் அது ஆர்கானிக் முறை! இவ்வளவு நன்மைகள் கொண்ட பொருள் காந்திக்குப் பிடித்த குடிசைத் தொழில். புற நகரில் என் நண்பன் மூலம் ஏற்பாடு செஞ்சாச்சு."

"அப்படி என்ன தொழில்?”

“உடம்புக்கு உரமூட்டும் நாட்டு சர்க்கரை கடலை உருண்டை!”

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com