

தொலைக்காட்சிப் பெட்டியில் பார்ப்பது பத்தாது, கைபேசியில் பார்ப்பதும் பத்தாது, நேரிலே சென்று தன் அன்புக்குரிய விளையாட்டு வீரனைப் பார்த்தாக வேண்டும் என்று இரண்டு மாதமாக சேமித்து வைத்த பணத்தை திருட்டு கடவுச்சீட்டிற்கு கொடுத்து விளையாட்டு அரங்கத்தினுள் நுழைந்தவர்கள் பலர். உள்ளே சென்று பார்த்தால் வெளியே இருந்ததை விட எக்கச் சக்கமான கூட்டம். அவ்வளவு கூட்டத்தை அங்கு வந்திருந்தவர்கள் ஒருத்தர் கூட எதிர்ப்பார்க்கவில்லை. ஆயிரக்கணக்கானோர் நிரம்பி வழிந்தனர்.
வீரர்கள் செல்ல சிறப்பு பாதையை தடுப்புக் கம்பிகளைக் கொண்டு பாதுகாப்புத் துறையினர் ஏற்படுத்தி இருந்தனர். அங்கே இருப்பவர்களுக்கு பிடித்தமான விளையாட்டு வீரர்கள் மக்களைக் கடந்து உள்ளே சென்றார்கள். கம்பிகளுக்கு பின்பு கூட்டமாக இருந்த அவ்வீரர்களின் விசிறிகள் அவர்கள் கடக்கும் போது “என் தெய்வமே...”, “தல...”, “தளபதியே...”, “ஆண்டவரே...” என ஆர்ப்பறித்துக் கொண்டு இருந்தார்கள். ஒருவன் தன் சட்டையை கிழித்தபடியே தன் நெஞ்சில் ஒரு வீரரின் உருவத்தை பச்சை குத்தி வைத்திருந்ததை அனுமன் தன் நெஞ்சை பிளந்து இராம பிரானையும் சீதா பிராட்டியையும் காட்டுவதைப் போல் காட்டிக் கொண்டிருந்தான் "நீ தான் என் உயிர் தலைவா..." என்று கூச்சலிட்டான்.