

“மாலா ஃபேனை பன்னெண்டுல வெய்டி. எரியுது” என்று சூரியனே கதறும் அளவிற்கு வெளியே அனல் அடித்துக் கொண்டிருந்தது. 'பிற்பகல் பதினொன்றில் இருந்து மூன்று மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது யாரும் வெளியே வர வேண்டாம்' என்று அரசாங்கம் பொதுமக்களை கெஞ்சிக் கொண்டிருக்கிறது. மக்கள் மசிந்தால் தானே! அவரவர் போக்கில் சுற்றிக் கொண்டுதானிருக்கின்றனர். கொரோனா காலம் போல பிற்பகலில் லாக்டவுன் போடலாமா என்று அரசின் உயர் மட்ட அதிகாரிகள் ஆலோசித்துக் கொண்டிருப்பதாக தகவல்.
ரயில் பெட்டி தொழிற்சாலையில் பணி புரிந்து ஓய்வூதியம் பெறும் பொறியாளரான எனக்கு வெளியே போக வேண்டிய அவசியம் ஏதும் இல்லை. மதியம் அருமையான தயிர் சாதமும் ஊறுகாயும் சாப்பிட்டேன். குளிரூட்டியை அதிகபட்சமாக்கியவன் தொலைக்காட்சியை முடுக்கி விட்டு ஈஸிசேரில் சாய்ந்தேன்.
தொலைக்காட்சியில் இரண்டு நிமிட தலைப்புச் செய்தி ஓடிக்கொண்டிருந்தது.