

பரத நாட்டிய அரங்கேற்றம்.
விஞ்ஞானி ரமணாவின் புதல்வி ஆடுகிறாள்.
சபா நிறைந்து இருந்தது.
ஆடிய பெண்ணின் அழகைப் பார்த்து அனைவரும் வியந்தனர்.
என்ன ஒரு நளினம்... அலாரிப்பு ஆகட்டும்… தில்லானா ஆகட்டும்… என்ன ஒரு நடை… என்ன ஒரு பாவனை.
வந்திருந்தவர்களில் ஒரு பிரபல சினிமா டைரக்டரும் ஒருவர்.
இந்தப் பெண்தான் நம் அடுத்த படத்தில் நாயகி.
ரமணாவின் சொந்தக்காரப் பெண்மணி ஒருத்தர் மனக்கணக்கு போட்டார். பையன் அமெரிக்காவில் இருந்து வந்ததும் பேசி முடிச்சிடலாம்.. கண்ணு என்னமா சுழட்டுறா...
இறுதி நிகழ்ச்சியாக ‘பாஞ்சாலி சபதம்’ என அறிவித்தார்கள். இது புதுசா இருக்கே...
திருதிராஷ்டிரன் சபை.
துச்சாதனன் வேடத்தில் ஒருவன் ஆக்ரோஷமாக நின்றான். அரங்கேற்ற மாணவிதான் பாஞ்சாலி. ஆடிக்கொண்டே கண்ணில் என்ன நடக்குமோ என்ற பயம் கண்ணில் தெரிய மேடையில் வலம் வந்தாள்.
ஒரு குரல் ஒலித்தது. “துச்சாதனா... பாஞ்சாலியின் வஸ்திரங்களைக் களைந்து மானபங்கம் செய்...”
துச்சாதனன் நெருங்கினான். பாஞ்சாலி பதறினாள். பாஞ்சாலியின் புடவையைக் களைய ஆரம்பித்தான். புடவை அவன் கையில். மெல்ல மெல்ல அவள் வஸ்திரங்கள் நீங்க... ஆடியன்ஸ் உற்று கண் இமைக்காது பார்க்க…
கிருஷ்ணர் வருவாரா...
அனைத்து வஸ்திரங்களும் நீக்கப்பட்டப்பின் பார்த்தால்...
இது வரை ஆடியது ஒரு ரோபோ.
வணங்கி நின்றது பாஞ்சாலி என்ற இதுவரை ஆடிய உலோக பொம்மை. உலோக கை கால்கள் பளிச்சிட்டன.
விஞ்ஞானி ரமணன் ஆடியன்ஸை வணங்கி மைக்கில்,
“துச்சாதனனும் ஒரு ரோபோதான்.”
துச்சாதனனும் தன் உடையை நீக்கி மெட்டல் கால் கைகளுடன் வணங்கினான்.