

குளித்துக் கொண்டு இருந்தபோது கேட்ட சத்தம் தெளிவாக இல்லை. கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தபோது தெளிவாகக் கேட்டது. அது குடுகுடுகுப்பைச் சத்தம்தான். கிராமத்திலிருந்து வெளிநாட்டிற்கு சென்று அதன் பிறகு இந்த நகரத்திற்கு வந்த இத்தனை ஆண்டுகளில் குடுகுடுப்பை சத்தத்தை இதுவரை கேட்கவே இல்லை. மகன், மகள் இருவருமே கல்லூரி முடித்து வேலைக்கு செல்கிற வயதாகியவரை எப்படி எங்குமே கேட்க முடியாமல் போனது என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
கிராமத்தில் இருக்கும் போது பித்தளை சாமான்களுக்கு ஈயம் பூசுகிற ஆட்கள் என்று பள்ளியின் மைதானத்தில் தங்கி இருப்பார்கள். அவர்களின் வாழ்வியல் முறையே வேறாக இருக்கும். தீயை மூட்டி அவர்கள் பாத்திரத்திற்கு ஈயம் பூசவதை பார்ப்பதில் நேரம் போவதே தெரியாது. அதேபோல் பூம்பூம் மாடு வைத்து வீட்டுக்கு வீடு வருகிறவர்கள். தோலால் பொம்மைகள் வைத்து கூத்து காட்டுகிறவர்கள். இவர்கள் எல்லோரும் இப்போது இருக்கிறார்களா? என்று தெரியவில்லை.
வேகமாக நான் வெளியே வருவதற்குள் அவர் எங்களது தெருவிலிருந்து பக்கத்து தெருவிற்கு சென்றுவிட்டார். நான் வேகமாக கிளம்பும்போது மனைவி இடைமறித்தார்.