
விடிந்தால் பரீட்சை.
ஹிட்லர் போர்க்களம் போவதற்கு முன்னர் என்ன செய்து கொண்டிருந்தான்? 16ஆம் லூயி மன்னனின் 32வது மனைவி பெயர் என்ன? எலிசபெத் மகாராணியார் தனது 82வது பிறந்ததினக் கொண்டாட்டத்தின்போது என்ன நிற மூக்குத்தி அணிந்திருந்தார்? – என்பவற்றையெல்லாம் நினைவுபடுத்துவதில் பிரயத்தனப் பட்டுக் கொண்டிருந்தான் சரவணன்.
இந்த நேரம் பார்த்து கோவிந்தர் ஹொஸ்பிட்டலில் போய் படுத்துக் கொண்டுவிட்டார். கோவிந்தர், சரவணனின் அம்மாவின் தம்பி. ‘கோவிந்தராசு’ என்பது அவரது இயற்பெயர். கோவிந்தருக்கு மிஞ்சிமிஞ்சிப் போனால் ஒரு வைரவிழாக் கொண்டாடுகிற வயசுகூட இல்லை. அதுக்குள் அப்படி என்ன தலை தெறிக்கிற அவசரமோ?
‘இயற்பெயர் என்னவாயிருந்தென்ன! விடிஞ்சா கோவிந்தர் கோவிந்தாதான்’ என்று எதிர்வீட்டு விதானையார் ஊரெல்லாம் புலம்பித் திரிகின்றார். விதானையார் தனிக்கட்டை. அவருக்கும் சுந்தரம் என்றொரு இயற்பெயர் உண்டு. சுந்தரம் பெயரில்தான் இருந்தது.
கோவிந்தரின் வாழ்க்கை வட்டிக்கு காசு கொடுப்பதும் சீட்டுப் பிடிப்பதுமாகக் கழிகின்றது. கோவிந்தரின் வீட்டுக்கோழி முட்டை போடுகிறதோ இல்லையோ அவரின் காசு பணம் குட்டி போடுகின்றது. குட்டிக்கும் கோவிந்தருக்கும் பல விதங்களில் சம்பந்தமுண்டு. இவற்றில் எல்லாம் இருந்து சரவணனுக்கு பரீட்சைக்கு கேள்விகள் வரலாம் என்று சொல்வதற்கில்லை. கோவிந்தர் ஒருவேளை சுகப்பட்டு தெருவீதிகளில் அலைந்தார் என்றால், நீங்கள் எல்லாரும் தலைதெறிக்க ஓடி தப்புவதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காகவே இதைச் சொல்லி வைக்கிறேன்.