சிறுகதை: பிடிக்காத தோசை

உண்மையான அன்பு என்பது தனக்கானதை விட்டுக்கொடுப்பதிலும், அன்புக்குரியவர்களின் தேவையை வார்த்தையின்றி உணர்ந்து அரவணைப்பதிலும் தான் முழுமை அடைகிறது என்பதை இந்த கதை நமக்கு உணர்த்துகிறது.
ராமன், கமலா
ராமன், கமலாAI Image
Updated on
Kalki Strip
Kalki Strip

‘என்ன டின்னர் கமலா, இன்னிக்கு...’ என்றபடி கிச்சனுக்குள் நுழைந்தார் ராமன்.

‘வேறென்ன... தோசைதான்... பழைய மாவு கொஞ்சம் இருக்கு... அதை காலி பண்ணிடனும், இன்னிக்கு...’ என்ற கமலா, ‘ஏன் வேறே ஏதாவது வேணுமா...’ என்றும் கேட்டாள்.

‘ச்சேச்சே... ஜஸ்ட் கேட்டேன்... நீ எது பண்ணினாலும் சரிதான்...’ என்று சிரித்தார் இவர்.

‘சரி மணி எட்டாகுது... தோசை ஊத்தவா...’ என்றாள் அவள்.

‘ஊத்து... ஆனா சட்னி போட வேணாமா... ’ என்றார் இவர்.

‘அதெல்லாம் முன்னேயே அரைச்சு வச்சாச்சு...’ என்று அவள் சொல்ல, அதே சமயம் அறைக்குள்ளிருந்து செல்வி குரல் கொடுத்தாள், ‘அம்மா எனக்கு பசிக்குதுமா...’ என்று. உடனேயே, ‘அம்மா பாபுக்கும் பசிக்குதாம்... நாங்க புக்கை மூடி வச்சிட்டோம்... டைனிங்க்க்கு வரப்போறோம்...’ என்றபடியே எழுந்து வந்தாள் அவள். கூடவே பாபுவும்.

‘நான் தோசைக்கல்லையே இப்போத்தான் அடுப்புலே ஏத்தப் போறேன்... அது சூடேறி... தோசை ஊத்தி... கொஞ்ச நேரமாவது ஆகாதா... உடனே டைனிங்க்க்கு வந்துட்டா எப்படி...’ என்று அவர்களை செல்லமாய் கடிந்து கொண்டாள் கமலம்.

‘சரிம்மா... அதனாலென்ன... அதுவரை டி.வி.பார்க்கறோம்...’ என்றுவிட்டு, ‘அப்பா...டி.வி.போடுங்கப்பா ப்ளீஸ்...’ என்றும் கேட்டுக்கொண்டாள்.

அவர் டி.வி.யை போட்டார். செய்தி சேனல் வந்தது. அதை மாற்றிக்கொண்டே வந்து காமெடியில் நிறுத்தினார். பிள்ளைகளுக்கு அதுதான் பிடிக்கும்.

‘ஏங்க... தட்டுகளை கொஞ்சம் எடுத்து வைங்க... தண்ணியும் பிடிச்சு வைங்க...தோசை வருது...’ என்று குரல் கொடுத்தாள் கமலா. உடனே ஓடிப்போய் நான்கு தட்டுக்களை கழுவி எடுத்து வந்து வைத்துவிட்டு செம்பிலும் டம்ளர்களிலும் தண்ணீர் கொண்டு வந்து வைத்தார். தானும் உட்கார்ந்து கொண்டார்.

ஒரு தட்டில் தோசையுடன் வந்தாள் கமலா. கணவனும் தயாராய் உட்கார்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு, ‘ரெண்டுதான் கொண்டு வந்திருக்கேன்... நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க...’ என்றாள். செல்விக்கும் பாபுவுக்கும் ஆளுக்கொரு தோசையைப் போட்டுவிட்டுத் திரும்பினாள். ராமன் அவர்களுக்கு சட்னியை எடுத்துப் போட்டார்.

‘அம்மா எனக்கு நெய் தோசை...’ என்றாள் செல்வி.

‘நோ... ! நைட்ல நெய் தோசை கிடையாது...’ என்றபடியே நடந்தாள் கமலா.

பாபு ஒரு தோசை தான் தின்பான். செல்வி இரண்டு தின்பாள். ராமன் மூன்று சாப்பிடுவார். கமலா இரண்டு சாப்பிடுவாள். இதுதான் வழக்கம்.

ஆக, அடுத்து இன்னும் இரண்டு தோசைகள் வந்தால் நாமும் சாப்பிட ஆரம்பித்துவிடலாம் என்று நினைத்தபடி உட்கார்ந்திருந்தார் ராமன்.

அவர் நினைத்ததற்கு மாறாக கமலா மூன்று தோசைகளுடன் வந்தாள். ஒன்றை செல்விக்குப் போடப் போனாள். ‘அம்மா இன்னும் இதையே சாப்பிட்டு முடிக்கலை... இன்னொன்னு போட்டா ஆறிப் போயிரும்... அதை அப்பாவுக்குப் போடுமா... நான் அப்புறமா வாங்கிக்கறேன்...’ என்றாள் செல்வி.

‘இப்படி ஸ்லோவா சாப்பிட்டா எப்படி...’ என்று செல்லமாய் கடிந்து கொண்டபடி, மூன்று தோசைகளையும் ராமனின் தட்டில் போட்டுவிட்டு, ‘நீங்க சாப்பிடுங்க...’ என்றுவிட்டு, சட்னி கிண்ணத்தை அவரருகில் நகர்த்தி வைத்துவிட்டுத் திரும்பினாள் அவள்.

கொஞ்ச நேரத்தில் இரண்டு தோசைகளுடன் வந்தவள் ஒன்றை செல்விக்குப் போட்டுவிட்டு, ஒரு காலி தட்டை இழுத்து வைத்து அதில் அடுத்த தோசையைப் போட்டுக்கொண்டு தானும் உட்கார்ந்தாள்.

ராமன் யோசித்தார். ‘ஒருவேளை கமலா இன்னொரு தோசையை ஊற்றிவிட்டு அது வேகட்டும் என்று வந்து உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டாளோ...’ என்று.

பாதியில் மெல்ல எழுந்தார் அவர்.

‘ஏங்க... ஏன் பாதியில எழுந்துட்டீங்க... ’ என்றாள் கமலா.

‘உனக்கு இன்னொரு தோசை வேணுமில்லையா... அதான்...’ என்றார் அவர்.

அவரை உட்காரச் சொல்லி சைகை காட்டியபடி, ‘வர வர தோசையே எனக்குப் பிடிக்க மாட்டேங்குது... எனக்கு ஒன்னு போதும்... நீங்க உட்காருங்க...’ என்றாள்.

‘இல்லை... இல்லை... நான் ஊத்தி எடுத்துட்டு வர்றேன்...’ என்று நகரப் போனவரை தடுத்து, ‘நாந்தான் சொல்றேனே... எனக்கு தோசை பிடிக்க மாட்டேங்குதுன்னு... பேசாம உட்கார்ந்து சாப்பிடுங்களேன்...’ என்றாள் கொஞ்சம் கண்டிப்புடன்.

தயக்கத்துடன் அமர்ந்தவர் யோசனையுடனேயே ஆனாலும் அவசரமாய் சாப்பிட்டார்.

பிள்ளைகள் சாப்பிட்டு முடித்துவிட்டு சாப்பிட்ட தட்டை அப்படி அப்படியே வைத்துவிட்டு எழுந்து போய் விட்டனர்.

வேகவேகமாய் சாப்பிட்டு முடித்த ராமன் குழந்தைகளின் தட்டையும் சேர்த்து எடுத்துக்கொண்டு கிச்சனுக்குள் போனார்.

‘ஒரு தோசையை ஊத்தி எடுத்துக்கொண்டு போய் அவளுக்குப் போடவேண்டும்...’ என்று நினைத்துக்கொண்டே போனவருக்கு அதிர்ச்சி.

அடுப்பு ஆப் ஆகி... தோசைக்கல் தூர வைக்கப்பட்டு... தோசை மாவு கிண்ணம் வாஷ்பேசினுக்குள் தண்ணீர் ஊற்றப்பட்டு... !

இதையும் படியுங்கள்:
சிறுகதை: கல்லாய் போன மனிதர்கள்!
ராமன், கமலா

துணுக்குற்ற ராமன் திரும்ப எத்தனித்தபோது, கமலாவும் தட்டுடன் வந்துவிட்டாள்.

‘கைகழுவிட்டுப் போக இவ்ளோ நேரமா...’ என்று செல்லமாய் சிடுசிடுத்தாள்.

‘அது இருக்கட்டும்... மாவு தீர்ந்துடுச்சா என்ன...’ என்றார்.

திகைப்புடன் நிமிர்ந்தவளால் பேச இயலவில்லை.

ராமனுக்குப் புரிந்துவிட்டது, இரண்டு தோசை சாப்பிடும் கமலாவுக்கு இரண்டாவது தோசைக்கு மாவு இல்லை என்று. அதனால்தான் ஏதோ தனக்கு தோசையே பிடிக்க மாட்டேனென்கிறது என்று பொய் சொல்லியிருக்கிறாள் என்று.

‘மாடே... மாவு பத்தலைன்னு சொல்லியிருந்தா கடையிலேர்ந்து வாங்கிட்டு வந்திருப்பேன்ல... இதுக்காக தோசையே பிடிக்கலைன்னு பொய் சொல்லனுமா... வயித்துக்கு வஞ்சனை பண்ணிக்கிட்டு...’ என்று செல்லமாய் கடிந்து கொண்டார்.

‘அடடா... எனக்கு போதும் போங்க... பத்தலைன்னு உங்ககிட்டே சொன்னேனா... மாவும் தீர்ந்துடுச்சு...’ என்றபடி கைகழுவப் போனாள் அவள்.

அவளது குரல் கரகரத்திருந்ததை கவனிக்க முடிந்தது அவரால்.

‘இரு... பாலை சூடேத்தறேன்.. பாலாவது குடி.... ஒரு தோசை எப்படி பத்தும்...’ என்றபடி பால் குக்கரை அடுப்பில் ஏற்றினார் ராமன்.

அவளுக்கு இப்போது கண்களும் கசிய ஆரம்பித்துவிட்டன.

logo
Kalki Online
kalkionline.com