
“இன்னிக்கு என்ன பஞ்சாயத்து?” என்றபடி உள்ளே நுழைந்தான் சதீஷ். தினமும் ஒரு புகார், தினமும் ஒரு தீர்வு என்று சில நாட்களாக அம்மாவும் மகளும் அடித்துக்கொள்வது கிட்டத்தட்ட அன்றாடம் சூரியன் உதிப்பதும், மறைவதும்போல வாடிக்கை ஆகிவிட்டது.
“ஏன், சண்டை சச்சரவு இருந்தால் உங்களுக்குக் கொண்டாட்டமா? சாலமன் பாப்பையா ரேஞ்சுக்கு இந்தப்பக்கமும் சரிதேய்ன், அந்தப்பக்கமும் சரிதேய்ன்னு தீர்ப்பை வாரி வழங்கலாம்னு எண்ணமோ” என்றாள் சுமதி சூடாக.
“அட, உனக்கு உம்பொண்ணு மேல கடுப்புன்னா அங்க மட்டும் வச்சுக்கணும். எதுக்கு என்னை வம்பிழுக்கறே” என்று கேட்டு “உட்கார்ந்த இடத்துல எல்லாத்தையும் வாங்கணும். கொண்டு வந்து குடுக்கறவன் அவஸ்தை ஏதாவது தெரியுதா? டெலிவரி பண்ணறவனைக் குத்தறதா நினைச்சு ஒட்டு மொத்த நிறுவனத்தையே குத்திட்டு உட்கார்ந்திருக்கறது இப்பல்லாம் வாடிக்கையாயிடுச்சு” என்று புலம்பியபடி களைப்பு தீர குளிக்கப் போனான். ப்ரபல டெலிவரி நிறுவனத்தின் ஹெச் ஆர் பிரிவின் தலைவன் அவன்.
குளித்துவிட்டு வந்ததும் அவன் கையில் காபியையும் தட்டில் கொஞ்சம் பஜ்ஜிகளையும் வைத்து தண்ணீரும் வைத்து, பொறுமையாக அவனிடம் என்ன ஆனதென்று விசாரித்தாள்.